சிங்கப்பூரின் பாதுகாக்கப்படும் வனவிலங்குப் பட்டியலில் இவ்வாண்டிறுதியில் மேலும் சில விலங்குகள் சேர்க்கப்படலாம். தாவர வகைகள், விலங்கினங்கள் ஆகியவை முற்றிலும் அழிந்துபோகும் அபாயத்தைக் கணிக்கும் ஆய்வு நிறைவடைந்தவுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
குறைந்தது 37 வகை வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தீங்கு விளைவிப்போரிடமிருந்து இந்த விலங்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பல வகை கடல் ஆமைகள், 'லெப்பர்ட் கேட்' எனப்படும் சிறுத்தைப் பூனை உள்ளிட்டவை தற்போது பட்டியலில் இடம்பெறுகின்றன.
சம்பந்தப்பட்ட வனவிலங்கு, சிங்கப்பூரில் அல்லது உலகளவில் அழிந்து போவதற்கான அபாயம் இருக்கிறதா என்பதைக் கருத்தில்கொண்டு அதைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து தேசிய பூங்காக் கழகம் முடிவெடுக்கும். தேசிய பூங்காக் கழகத்தின் 'நேஷனல் பயோடைவர்சிட்டி சென்டர்' எனும் தேசிய பன்முகத்தன்மை நிலையத்தின் இயக்குநரான டாக்டர் கேரன் துன் இதைத் தெரிவித்தார்.
தேசிய பூங்காக் கழகம் அச்சிடும் 'தி சிங்கப்பூர் ரெட் டேட்டா புக்' எனும் புத்தகத்தில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு வனவிலங்குகள் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்குகின்றன என்பதை விவரிக்கிறது. அப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 2008ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
இவ்வாண்டிறுதிக்குள் புத்தகத்தின் மூன்றாவது பதிப்பை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
"பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பட்டியல் குறித்து தேசிய பூங்காக் கழகம் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களுடன் அடிக்கடி பரிசீலனை செய்யும். இவ்வாண்டிறுதியில் 'தி சிங்கப்பூர் ரெட் டேட்டா புக்' புத்தகத்தில் மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்ட பிறகு நாங்கள் அவர்களுடன் பரிசீலனை செய்வோம்," என்று டாக்டர் துன் கூறினார்.
வனவிலங்குச் சட்டத்தின்கீழ் பட்டியலில் இடம்பெறும் விலங்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சிங்கப்பூரின் வனவிலங்குகளைப் பாதுகாத்து அவற்றைக் கவனித்துக்கொள்வது இச்சட்டத்தின் நோக்கம்.
உதாரணமாக, அனுமதியின்றி பட்டியலில் இடம்பெறும் வனவிலங்கை வேண்டுமென்றே கொன்றாலோ, பிடித்து வைத்துக்கொண்டாலோ ஒருவருக்கு அதிகபட்சம் ஈராண்டுச் சிறைத் தண்டனையும் 50,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

