சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் புதிய வானிலையியல், பருவநிலை அறிவியல் பாடம் ஒன்றை வழங்கவுள்ளது. இது, பட்டக் கல்விப் பாடத் திட்டத்தில் 'மைனர்' எனப்படும் ஓர் அங்கமாக வழங்கப்படும் பாடமாக இருக்கும்.
முதன்முறையாக இத்தகைய பாடம் சிங்கப்பூரில் வழங்கப்படவுள்ளது. சவாலாக இருக்கக்கூடிய வானிலையியல், பருவநிலை துறைக்கு மாணவர்களை அறிமுகப்படுத்தும் என்று தேசிய பல்கலைக்கழகமும் 'எம்எஸ்எஸ்' எனும் சிங்கப்பூர் வானிலையியல் சேவையும் தெரிவித்தன.
கூடுதலானோர் வானிலை, பருவநிலை அறிவியலாளர்களாக உருவெடுக்க வகைசெய்வது பாடத்தின் இலக்கு.
வானிலையியல் நிபுணர்களாகவோ பருவநிலை விஞ்ஞானிகளாகவோ வேலை செய்ய விரும்புவோர் இதைத் தாண்டி முதுகலைப் பட்டக் கல்வி மேற்கொள்ளவேண்டும்.
நீடித்த நிலைத்தன்மை ஆலோசகர்கள், மறுபயனீட்டு எரிசக்தி வல்லுநர்கள் போன்ற வேலைகளைச் செய்ய விரும்புவோருக்கு இந்தப் பாடம் உதவும்.
புதிய பாடம் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் பள்ளியில் இருக்கும் இயற்பியல் பிரிவின்கீழ் வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் மானுடவியல், அறிவியல் பள்ளியைச் சேர்ந்த எல்லா மாணவர்களும் புதிய பாடத்தைப் பயிலலாம்.
புதிய பாடம் எப்போது தொடங்கப்படும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. பருவநிலை அறிவியல் துறையில் வேலைகளுக்கு சிங்கப்பூர் தற்போது வெளிநாட்டினரை அதிகம் சார்ந்துள்ளது. இத்துறைக்குக் கூடுதலான சிங்கப்பூரர்களைச் சேர்க்க புதிய வானிலையியல், பருவநிலை அறிவியல் பாடம் கைகொடுக்கும் என்று தேசிய பல்கலைக்கழகம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

