செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5fbdb58b-73a5-4c8c-b2ce-1e3fb9c4b3a6
-
Google News Preferred Icon

வியட்னாம் பிரதமரைச் சந்திக்கவுள்ள துணைப் பிரதமர் ஹெங்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வரும் வியாழக்கிழமை வரை வியட்னாமிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். அவர் நேற்று வியட்நாமிற்குப் புறப்பட்டார்.

தமது பயணத்தின்போது திரு ஹெங் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்னைச் சந்திப்பார். அதோடு, 'விஎஸ்ஐபி' எனும் வியட்னாம்-சிங்கப்பூர் தொழில்துறைப் பூங்காவிற்கும் அவர் செல்வார்.

பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங், வியட்னாம் துணைப் பிரதமர் லெ மின் காய் உள்ளிட்ட தலைவர்களையும் அந்நாட்டு வர்த்தகச் சமூகத்தினரையும் சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே இருக்கும் மிகச் சிறந்த உறவைத் திரு ஹெங்கின் பயணம் வலியுறுத்துகிறது என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

'பராமரிப்பாளர்களின் சுமை குறைய அதிகமானோர் முன்வரவேண்டும்'

பராமரிப்பாளர்களின் சுமையைக் குறைக்க கூடுதல் சிங்கப்பூரர்கள் முன்வரவேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசினார். பராமரிப்பாளர்களுக்கு உதவிவரும் 23 அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு திருமதி டியோவும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கேரி டானும் மாநாட்டில் கேட்டுக்கொண்டனர்.

பெரும்பாலான வேளைகளில் பெண்களே பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுவதும் குறிப்பிடப்பட்டது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பல தொண்டூழியர்கள் பணியிலிருந்து விலகிக்கொண்டனர். அதனால் புதிய தொண்டூழியர்களை நியமித்து அவர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபட வைக்க சில ஆதரவு அமைப்புகள் சிரமப்படுகின்றன என்று கூறப்பட்டது.

கொவிட்-19 காலத்தில் வளர்ந்த

குழந்தைகளுக்கு உதவி

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி பெரிதும் மாறுபட்டிருக்கலாம்.

உதாரணமாக 2020ஆம் ஆண்டு பிறந்த ஒரு குழந்தையின் தாய் குடும்பத்திற்காக கூடுதல் நேரம் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டியிருந்திருக்கலாம். பெற்றோருடனோ மற்ற குழந்தைகளுடனோ நேரம் செலவிட அக்குழந்தைக்கு அதிக வாய்ப்பிருந்திருக்காது. மேலும், இந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி போன்றவற்றின் திரைகளைப் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கலாம் (படம்). இப்படிப்பட்ட குழந்தைகள் இரண்டு வயதில் பாலர்பள்ளிக்குப் போகும்போது சரியாக பேசுவதற்கு சிரமப்பட வாய்ப்புண்டு.

பேச சிரமப்படுவது, கவனக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கும் அதிகமான குழந்தைகள் அண்மையில் தன்னிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் பிள்ளை மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்தது. உலகளவிலும் இந்நிலை உருவானதாகத் தகவல்கள் வெளியாயின.

இத்தகைய பிரச்சினைகளைக் கையாள வீட்டில் குழந்தைகளிடம் அதிகம் பேசுமாறு பெற்றோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். பிள்ளைகளைப் பேசவைக்கும் விளையாட்டுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுமாறும் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதன் தொடர்பில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த ஆறு வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் முயற்சியில் தேசிய திட்டமான 'கிட்ஸ்டார்ட்'டும் கைகொடுக்கிறது.

'சிறுபான்மையினர் உணர்வை

காப்பது சமூக ஒருமைப்பாட்டின்

அங்கம்'

ஒரு மதத்தை இழிவுபடுத்தும் கேலிச் சித்திரத்தை அச்சிட சிங்கப்பூரில் என்றுமே அனுமதி வழங்கப்படாது என்று முன்னாள் உயரிய அரசாங்க ஊழியரான இயோ சீ யான் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு பிரான்சில் சார்லி ஹெப்டோ சஞ்சிகையில் வெளியான கேலிச் சித்திரத்தைப் பற்றி அவர் பேசினார். அச்செயலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 12 பேர் மாண்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

அந்த வகையில் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் காப்பது, பல சமயங்கள் அடங்கிய சமூகத்தை வழிநடத்தும் சிங்கப்பூரின் திட்டங்களில் அடங்கும் என்று திருவாட்டி இயோ குறிப்பிட்டார். 2012லிருந்து 2018ஆம் ஆண்டுவரை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்த அவர், ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ் ஆன் கம்யூனிட்டிஸ் ஆஃப் சக்செஸ்' எனும் மாநாட்டில் பேசினார்.