ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஒரு சொகுசு தனியார் கூட்டுரிமை வீட்டு கட்டடத்தில் நான்கு வீடுகளை ஒரே நேரத்தில் ஒருவர் வாங்கியுள்ளார். வீடுகளின் மொத்த விலை $60 மில்லியன். வீடுகளை வாங்கியவர் சீன நாட்டினர் என்று கூறப்பட்டது. ஒரு வீட்டின் விலை 20 மில்லியன் வெள்ளி; மற்ற மூன்று வீடுகளின் சராசரி விலை சுமார் 12 மில்லியன் வெள்ளி.
ஒவ்வொரு வீட்டின் பரப்பளவும் நல்ல தாரளமான அளவு என்று சாவ்பாவ் சீன நாளிதழ் குறிப்பிட்டது. சென்ற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 9) வர்த்தகம் நடந்ததாகக் கூறப்பட்டது. விற்கப்பட்ட வீடுகள் காட்சிக்காக வைக்கப்பட்டவை. அவை ஏற்கெனவே அலங்கரிக்கப்பட்டதால், வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக வீட்டிற்கு குடியேறலாம்.
இந்த கூட்டுரிமை வீடுகள் இத்தாலிய கட்டடக்கலை வடிமைப்பாளர் ஒருவரால் வடிமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 77 வீடுகள் உள்ளன. இவற்றில் பத்து வீடுகள் இன்னும் விற்கப்படவில்லை.
சீனாவில் பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பல கோடீஸ்வர சீனர்கள் தங்கள் சொத்தை மற்ற நாடுகளுக்கு மாற்றிவிடுகின்றனர். சிங்கப்பூரில் சொத்து பாதுகாப்பாக இருக்கும் என்று சீனர்கள் நம்புகின்றனர். இதனால் அண்மை காலத்தில் பல சீனர்கள் இங்கு சொகுசு வீடுகளை வாங்கிவருகின்றனர்.

