வரி வருவாய் 22%க்கும் அதிக மாகக் கூடி இருந்தாலும் ஜிஎஸ்டி வரி, திட்டமிடப்பட்டதைப் போல் அடுத்த ஆண்டு உயரும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பணவீக்கச் சூழலிலும் ஜிஎஸ்டி அதிகரிப்பை ஈடுசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.
குறைந்த வருமான குடும்பத்திற்குக் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் பாதிப்பு இருக்காது. தேவைஎனில் உதவித் திட்டங்களை அரசாங்கம் அதிகரிக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி உயர்வுக்கான அவ சியத்தை விளக்கிய திரு வோங், வழக்கமான செலவினத் தேவைகள் அதிகரித்து வருகின்றன என்றார்,
அவற்றைச் சமாளிக்க நிலையான, கட்டிக்காக்கக்கூடிய வருவாய் ஏற்பாடு அவசியம் என்ற திரு வோங், இந்த நிலையில், முத்திரை வரி போன்ற ஆண்டுக்காண்டு ஏறி இறங்கக்கூடிய வரி வசூலை சிங்கப்பூர் சாந்திருக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
2021-2022 நிதி ஆண்டில் வசூலான வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது. அடுத்த ஆண்டிலும் அதற்கு அடுத்த ஆண்டிலும் ஜிஎஸ்டி வரியை உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
வரி வசூல் அதிகரித்து இருப்பதால் ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்தி வைக்கப்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதற்கு அளித்த பதிலில் துணைப் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி அடுத்த ஆண்டில் 7%லிருந்து 8% கூடும். 2024ல் அது 9% ஆக உயரும். 2021-2022 நிதி ஆண்டில் மொத்தம் $60.7 பில்லியன் வரி வசூலானது. இது முந்திய ஆண்டைவிட 22.4% அதிகம்.
கொவிட்-19 காரணமாக சென்ற நிதி ஆண்டில் வரி வசூல் 7.3% குறைந்தது என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் சென்ற மாதம் தெரிவித்து இருந்தது.
அதோடு மட்டுமின்றி, 2021-22 நிதி ஆண்டில் முத்திரை வரி வசூல் அதிகமாக இருந்ததும் அந்த ஆண்டு அதிக வருமான வரி வசூலானதற்கு முக்கிய காரணம்.
பணவீக்கம் காரணமாக ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்விக்கும் திரு வோங் பதிலளித்தார்.
பணவீக்கம் தொடர்பில் சிங்கப்பூரர்கள் அடையும் கவலையை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள் உண்மையான சம்பள உயர்வை அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்றார்.
பணவீக்கத்தைத் தாண்டி சம்பளம் கூடியதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பு பற்றி இந்த ஆண்டு முடிவில்தான் தெரியும். ஆனால், பணவீக்கம் கூடி இருக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஈடுசெய்ய சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றார் அவர்.
படிப்படியான சம்பள உயர்வு முறையை விரிவுபடுத்தி அதன்மூலம் குறைந்த வருவாய் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடைமுறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள்தொகை மூப்படைவதால் சுகாதாரப் பராமரிப்புச் செலவு கூடுகிறது. அரசாங்கச் செலவினம் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது.
நாடு தனது பொருளியலை வேகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பசுமை உருமாற்ற முயற்சிகளையும் முடுக்கிவிட வேண்டி இருக்கிறது என்றார் அவர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கச் செலவினம் இப்போது 18% ஆக இருக்கிறது.
இது 2030ஆம் ஆண்டு வாக்கில் 20% அல்லது அதற்கும் அதிகமாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 வரவுசெலவுத் திட்டத்தில் பலதரப்பட்ட வருவாய் நடவடிக்கைகளைத் தான் அறிமுகப்படுத்தியதற்கு இதுவே காரணம் என்றார் திரு வோங்.