புளோக்கில் மின்தூக்கிக் கூடத்தில் தீயணைப்புக் கருவி: பரிசோதனை
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, புதிய ஏற்பாடு ஒன்றைப் பரிசோதித்துப் பார்க்க உள்ளது. அதன்படி புளோக்குகளில் உள்ள மின்தூக்கிக் கூடங்களில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்படும். அவற்றைப் பொருத்தி பராமரிக்கும் பணியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மேற்கொள்ளும்.
உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மன்றங்கள், தெமாசெக் அறநிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து குடிமைத் தற்காப்புப் படை இந்தப் பரிசோதனையை நடத்துகிறது.
இரண்டு வீவக புளோக்குகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மின்தூக்கிக் கூடத்தில் அந்தக் கருவியைத் தற்காப்புப் படை அமைக்கும். அவசர நேரத்தில் அதை குடியிருப்பாளர்கள் பயன்படுத்தலாம் என்றார் அமைச்சர்.
தீயணைப்புச் சாதனத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்கள் ஈடுபாட்டுச் செயல்திட்டத்தின் வழி மக்களுக்குக் குடிமை தற்காப்புப் படை போதித்து வருவதாகவும் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல் குறிப்பிட்டார்.
'கணினி வன்பொருள் செயல்படாமல் போனதே காரணம்'
சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் கணினி தகவல்தொடர்ப்பு முறையில் சென்ற மாதமும் இந்த மாதத் தொடக்கத்திலும் இரண்டு முறை கோளாறு ஏற்பட்டது.
அவற்றுக்குக் கணினித் தகவல் மையத்தில் உள்ள கணினி வன்பொருள் சாதனங்கள் சரியாக செயல்படாமல் போனதுதான் காரணமே தவிர ஊழியர் பற்றாக்குறை காரணம் அல்ல என்று நேற்று நாடாளுமன்றத்தில் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 27ஆம் தேதியும் செப்டம்பர் 5ஆம் தேதியும் அந்தக் கோளாறு ஏற்பட்டது.
அது பற்றி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திரு புதுச்சேரி பதில் அளித்தார்.
அந்தக் கோளாறு காரணமாக பலதுறை மருந்தகங்கள் சிலவற்றில் நோயாளிகள் மருத்துவரைப் பார்ப்பது தாமதமடைந்தது. அல்லது அதற்காக வேறு ஒரு நாளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த இரண்டு கோளாறுகள் காரணமாக வழக்கமான செயல்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு கணிசமாக இருந்தது என்று அமைச்சர் கூறினார்.

