சிங்கப்பூர் ஊழியர் அணி தொடர்ந்து போட்டித்திறனுடன் திகழ்வதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளின் ஓர் அங்கமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த திறனாளர்களுக்கு உரிய 'ஒன் பாஸ்' ஏற்பாட்டை பார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஒன் பாஸ் திட்டம் பற்றி கடந்த ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. மாதம் $30,000 நிரந்தர சம்பளம் பெறும் வெளிநாட்டு திறனார்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காக ஒன் பாஸ் திட்டம் நடப்புக்கு வருகிறது.
அந்த அனுமதியின் பேரில் சிங்கப்பூருக்கு வருவோர் பல வேலைகளைப் பார்க்கலாம். அதே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் களைத் தொடங்கலாம்.
கடந்த சில மாதங்களாக பரந்த அளவிலான ஓர் ஏற்பாட்டை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் அங்கமாக ஒன் பாஸ் ஏற்பாடு இடம்பெறுகிறது என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர் தாக்கல் செய்த துணை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்து அவர் பேசினார்.
ஒன் பாஸ் ஏற்பாட்டின்கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல வேலைகளைப் பார்க்கும் நீக்குப்போக்கு இருக்கிறது. இதை சிறிய, நடுத்தர நிறுவனங்களில் வேலை பார்க்கும் எம்ப்ளாய்மண்ட் பாஸ்தாரர்களுக்கு நீட்டிப்பது பற்றி அந்த உறுப்பினர் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், வேலை அனுமதி ஏற்பாட்டில் செய்யப்பட்டிருக்கும் மேம்பாடுகளில் வெளிநாட்டு நிபுணர்களுக்கான சில மாற்றங்களும் உள்ளடங்கும் என்றார்.
எம்ப்ளாய்மண்ட் பாஸ்தாரர்களில் தலைசிறந்த முதல் 10 விழுக்காட்டினருக்கு வேலை விளம்பர நிபந்தனையில் இருந்து விலக்கு அளிப்பது அந்த மாற்றங்களில் ஒன்றாகும்.
இது இங்கு செயல்படும் உலக நிறுவனங்கள், தங்களுடைய செயல்முறைகளுக்காக முக்கிய ஊழியர்களை வேலையில் அமர்த்த முடியும் என்ற உறுதியை அந்த நிறுவனங்களுக்கு வழங்கும் என்று அமைச்சுநிலை அறிக்கையில் தெரிவித்தார்.
நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பு ஏற்பாட்டில் இருந்து விலக்கு பெற தகுதிபெறும் எம்ப்ளாய்மண்ட் பாஸ்தாரர்களில் பெரும்பாலுாம் மூத்த நிபுணர்களும் நிர்வாக ஊழியர்களும் அடங்குவர் என்றார் டாக்டர் டான்.
எதிர்த்தரப்பு தலைவர் பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து அமைச்சர் பேசினார்.
நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பின் கீழ் இப்போது முதலாளிகள் மைகேரியர்ஸ்ஃபியூச்சர் என்ற வேலை இணைய வாயிலில் உள்ளூர் ஊழியர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும்.
அதற்கு 14 நாள்கள் கழித்துதான் முதலாளிகள் எம்ப்ளாய்மண்ட் பாஸ் அல்லது எஸ் பாஸ்தாரர்களை வேலையில் அமர்த்த முடியும். வெளிநாட்டுத் திறனாளர் மாதம் $20,000க்கும் அதிக தொகை சம்பாதித்தால் இதிலிருந்து விலக்குண்டு.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்தத் தொகை $22,500 ஆக உயர்த்தப்படும்.
அதேவேளையில், 'கேம்பஸ்' என்ற மதிப்புப்புள்ளி அடிப்படையிலான ஓர் ஏற்பாடு அடுத்த செப்டம்பரில் நடப்புக்கு வருகிறது.
எம்ப்ளாய்மண்ட் பாஸ் மனுதாரரும் அவருடைய முதலாளியும் கொண்டுள்ள திறன்களை மதிப்பிடும் இந்த ஏற்பாடு சிங்கப்பூரின் ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற உறுதுணையாகத் திகழும் வகையில் முதலாளிகள் பல திறமை களைக் கொண்ட வெளிநாட்டு திறனார்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த 14 நாள் நிபந்தனை 2014ல் நடப்புக்கு வந்தது. கொவிட்-19 தொற்று காலத்தில் இது 28 நாட்களாகக் கூடியது. அப்போது வேலை தேடியவர்களைவிட வேலைகள் குறைவாக இருந்தன.
இப்போது வேலைச் சந்தை மேம்பட்டு இருக்கிறது. இப்போது வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆகையால், 14 நாள் ஏற்பாடு மீண்டும் திரும்புகிறது என்றாரவர்.

