ஆசிரியர்களின் நல்வாழ்வில் பெற்றோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு சொந்த வேலைகள் இருக்கும்; அவற்றுக்கு நேரம் தேவைப்படும் என்பதை பெற்றோரும் பொதுமக்களும் உணர வேண்டும்.
ஆசியர்களுடன் அவர்களின் வேலை நேரத்திற்குப் பிறகு இடம்பெறக்கூடிய தங்கள் தகவல் தொடர்புகளைக் கூடுமான வரை பெற்றோர்களும் மக்களும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர்களிடம் இருந்து அதிகமான பலாபலன்களை எதிர்பார்க்க முடியும் என்றார் அமைச்சர்.
ஆசிரியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்களின் வேலைச் சூழலை ேமம்படுத்தவும் கல்வி அமைச்சு எடுக்கும் கூடுதல் முயற்சிகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
இதன் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துவரும் பல்வேறு திட்டங்கள், செயல்திட்டங்கள், முயற்சிகள் பற்றி விளக்கிய அமைச்சர், இருந்தாலும் ஆசிரியர்களின் நல்வாழ்வில் பெற்றோர் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்றார்.
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க உதவி இருக்கின்ற பெற்றோர் ஆதரவு குழுக்களையும் முன்னாள் மாணவர் அமைப்புகளையும் அமைச்சர் பாராட்டினார்.
ஆசிரியர்களுடன் கூடிய கலந்துரையாடல்களுக்கென்றே கல்வி அமைச்சு சில விதிமுறைகளை வகுத்து இருக்கிறது.
ஆனால், சில பெற்றோர்கள் அவற்றை மதித்து நடப்பதில்லை என்று திரு சான் கூறினார்.
மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சியா கியன் பெங் கேட்ட கூடுதலான ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பெற்றோர், பொதுமக்களுக்காகவே அமைச்சு நடத்தை விதித் தொகுப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.
அந்த வழிகாட்டி நெறிமுறைகளை அமைச்சின் இணையத்தளத்தில் காணலாம்.
பள்ளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு அந்த வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்கி நடக்கும்படி பெற்றோரை கல்வி அமைச்சர் சான் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

