நிர்வாகச் சேவை, நீதித்துறை, அரசு ஆணை பெற்ற கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரி
களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு நேற்று அறிவித்தது.
இத்துறைகளில் சம்பளத் தொகை ஆகக் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போதைய சந்தை வரையறையுடன் ஒப்பிடும்போது இத்துறைகளில் உள்ள சம்பளங்கள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் சம்பளத்துக்கான சந்தை வரையறை வெகுவாக அதிகரித்துவிட்டதாகப் பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
"சம்பளம் உயர்த்தப்படுவதால் பொதுச் சேவைக்குத் தொடர்ந்து பல திறனாளர்களை ஈர்க்கலாம். அதுமட்டுமல்லாது, தற்போது தலைமைப் பதவிகளில் இருக்கும் திறனாளர்களை தக்கவைத்துக்கொள்ளலாம்," என்று அது தெரிவித்தது.
சம்பளத் தொகை ஐந்து விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்றும் சம்பள வரம்புகளும் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். இந்த மாற்றத்தின் மூலம் நிர்வாகச் சேவையைச் சேர்ந்த ஏறத்தாழ 300 அதிகாரிகளும் நீதித்துறை, அரசு ஆணை பெற்ற கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 30 அதிகாரிகளும் பலனடைவர்.
அவர்களில், தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதித்துறை ஆணையர்கள், தலைமைச் சட்ட அதிகாரி, பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர், தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி ஆகியோரும் அடங்குவர்.
"தரத்தைப் படிப்படியாக மேம்
படுத்திக்கொள்ளும் முதலாளி என்கிற முறையில் போட்டித்தன்மைமிக்க சம்பளத்தை வழங்குவதுடன் சேவைத் திட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு முயற்சிகளைப் பொதுச் சேவை தொடர்ந்து வலுப்படுத்தும்.
"சுழற்சி முறை வேலை, தனியார் மற்றும் பொதுத் துறைகளில் இணைந்து வேலை அனுபவம் பெறுதல், தலைமைத்துவத் திட்டங்கள் ஆகியவற்றை நிர்வாக அதிகாரிகள் எதிர்பார்க்கலாம்," என்று பொதுச் சேவைத் துறை தெரிவித்தது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசாங்க அதிகாரிகளின் சம்பளம் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் தேவைப்பட்டால் சம்பளத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அது கூறியது.

