ஹுவா செங் பில்டர் என்ற பொறியியல், கட்டுமான நிறுவனம் பணியிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பாக எழும் பிரச்சினைகளை ஊழியர்கள் தீர்க்க உதவியாக மிகை மெய்
நிகர் தொழில்நுட்பத்தை கையாண்டது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான நிர்வாக நடைமுறைகளை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டங்களில் சிறப்பாக செயல்
படுத்தியதற்காக 60 நிறுவனங்கள் பாராட்டுப் பெற்றன. இதில் ஹுவா செங் பில்டர் நிறுவனமும் ஒன்று.
நிலப் போக்குவரத்து ஆணையம் ஆண்டுதோறும் நடத்தும் பாதுகாப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது. அதில் இந்த 60 நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
அசுத்தமான நீர், மோசமான தூசு கட்டுப்பாடு போன்ற ஊழியர்கள் எதிர்நோக்கும் உண்மை நிலை பிரச்சினைகளைத் தீர்க்க இந்த நிறுவனம் கைத்தொலைபேசி செயலியில் மிகை மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. உதாரணத்திற்கு இதன்மூலம் ஊழியர்கள் வேலையிடத்தில் வெள்ள நீர் வருவது போன்ற சூழலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என முடிவு செய்யலாம்.
இதற்காக இந்த நிறுவனத்துக்கு நேற்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சவால் கேடயம் வழங்கப்பட்டது.
மற்ற கட்டுமான நிறுவனங்களின் பாரம்பரிய பயிற்சித் திட்டத்துடன் ஒப்பிடும்போது ஹுவா செங் நிறுவனம் பயன்படுத்தும் மிகை மெய்நிகர் பயிற்சித் திட்டம் பயிற்சி நேரத்தை 70%வரை குறைக்கிறது.
இந்த நேர சேமிப்பு கட்டுமான உற்பத்தித் திறனை மேம்படுத்த அந்த நிறுவனத்துக்கு உதவியுள்ளதாக ஹுவா செங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆலன் நா தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் தனது செயல்பாட்டை அது மேம்படுத்தியுள்ளதை காட்டும் ஹுவா செங் நிறுவனத்தின் இந்தச் செயலி ஓர் உதாரணம் மட்டுமே.
இதுபோல் இந்த நிறுவனம் கட்டுமான பாதுகாப்புக்கான சிறந்த விருது உட்பட மேலும் ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் நேற்றுக் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், தங்கள் திறன்களை வளர்த்து உற்பத்தித் திறனை பெருக்கும் நிறுவனங்கள் புத்தாக்க தீர்வுகளைப் பயன்படுத்துவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

