ஜெட்ஸ்டார் விமானச் சேவை அதன் செயல்பாடுகளை முனையம் 1லிருந்து முனையம் 4க்கு மாற்றுவது தொடர்பாக சாங்கி விமான நிலையம் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முனையம் 1ல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே ஜெட்ஸ்டாரின் விருப்பம். இதுவரை இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆனால் சாங்கி விமான நிலையம் சிங்கப்பூரின் ஒரே ஒரு வர்த்தக நிலையமாக இருப்பதால் அது கேட்டுக்கொண்டபடி முனையம் 4க்கு மாறுவதைத் தவிர ஜெட் ஸ்டாருக்கு வேறு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இறுதி ஏற்பாடு ஜெட்ஸ்டார் விமானச் சேவைக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் நீண்டகால அடிப்படையில் சாங்கி விமான நிலையத்தில் அதன் செயல்பாட்டை அது குறைத்துக்கொள்ளக்கூடும் என்று விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாங்கி விமான நிலையக் குழுமத்தின் திட்டப்படி அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் ஜெட்ஸ்டார் முனையம் 4லிருந்து செயல்பட இருந்தது. ஆனால் இடம்மாறும் எண்ணம் இல்லை என்று ஜெட்ஸ்டார் தெரிவித்தது.

