மானபங்கம் செய்யப்பட்டதாக பொய் கூறிய பெண்ணுக்குச் சிறை
அரசாங்க ஊழியர் ஒருவர் தம்மை மானபங்கம் செய்துவிட்டதாகப் பொய் புகார் அளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த குற்றத்துக்குப் பெண் ஒருவருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ 36 கிலோ உணவுப்பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து அவற்றின் விற்பனை தொடர்பாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ததற்காக 41 வயது வாங் சூவுக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று சட்டவிரோத உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை பாசிர் பாஞ்சாங் பரிசோதனை நிலையத்தில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்து சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் மாதம் தாம் கொடுத்த வாக்குமூலத்தைத் தம்மிடம் திருப்பிக் கொடுக்காவிட்டால் தம்மை மானபங்கம் செய்துவிட்டதாக புகார் செய்யப்போவதாக அமைப்பின் அதிகாரி ஒருவரை வாங் மிரட்டினார்.
பணம் கையாடிய முன்னாள் இயக்குநர்களுக்குச் சிறை
நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான $1.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கையாடியதற்காக அதன் இரண்டு முன்னாள் இயக்குநர்களுக்குத் தலா மூன்று ஆண்டுகள், பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2010 அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரரான 63 வயது இசேலி ருடோல்ஃப் ஜேம்ஸ் மேட்லாண்ட், மலேசியரான 48 வயது ஹாவ் சூ ஃபெங் ஆகியோர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் இருவரும் தி கோல்டு லேபல் நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பதவி வகித்தனர். அந்நிறுவனம் 2,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் தங்கம் விற்றது.
அரசு வழக்கறிஞர் மறுப்பு; மீட்டுக்கொள்ளப்பட்ட விண்ணப்பம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் சாலையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றதற்காகவும் முகக்கவசம் அணியாதது தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகாததற்காககவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் பெண், சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் பயணம் மேற்கொள்ள இம்மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, விண்ணப்பத்தை 55 வயது ஃபூன் சியூ யோக் மீட்டுக்கொண்டார். மரினா பே சேண்ட்ஸ் உட்பட பல்வேறு பொது இடங்களில் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக அவருக்கு கடந்த ஆண்டு 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்ணின் மண்டை ஓடு முறிவு; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளையர்
தனிநபர் நடமாட்டக் கருவியை வேக வரம்பை மீறி மிக வேகமாகச் செலுத்தி 46 வயது பெண் மீது மோதி அவரது மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்ததை ஏற்படுத்தியதை இளையர் ஒருவர் ஒப்புக்கொண்டார். படுகாயம் அடைந்த அப்பெண் இரண்டு வாரங்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அதன் பிறகு அவருக்குப் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. நினைவிழப்பு, பேசவும் விழுங்கவும் சிரமப்படுதல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டார்.
கவனமின்மையுடன் செயல்பட்டு அப்பெண்ணுக்குப் படுகாயம் விளைவித்த குற்றத்தை மாணவரான 20 வயது ஓங் குவான் யுன் நேற்று ஒப்புக்கொண்டார்.
விதிமுறைக்கு உட்படாத தனிநபர் நடமாட்டக் கருவியை அவர் ஓட்டியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் ஓங்கை வைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அவர் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

