கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை, பொதுப் போக்குவரத்து நடைமுறைச் செலவுகள் சராசரியாக ஆண்டுக்கு 7% உயர்ந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வருமான உயர்வு அதற்கு ஈடானதாக இல்லை என்றும் அவர் சொன்னார்.
இதன் விளைவாக, அரசாங்கம் அளித்துவரும் மானியங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போதைக்கு ஆண்டுக்கு $2 பில்லியனுக்கும் மேல் மானியம் வழங்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று திரு ஈஸ்வரன் கூறினார்.
புக்கிட் பாஞ்சாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசாங்கம் எவ்வாறு முடிவுசெய்கிறது என்றும் செலவினங்கள் அதிகரித்துவரும் நிலையில் அவை மறுஆய்வு செய்யப்படுமா என்றும் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஈஸ்வரன், இப்போதைய பயனீட்டாளர்களும் வரிசெலுத்தும் இப்போதைய, எதிர்காலத் தலைமுறையினரும் பொதுப் போக்குவரத்து நிதிச் செலவுகளைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் மூன்று முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார்.
முதலாவதாக, பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து முழுமையாக நிதி வழங்கும். அடுத்த பத்தாண்டுகளில் ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் $60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, அதிகாரிகள் செலவுகளைக் குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் வேண்டியுள்ளது என்றார் அவர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தால் செயல்திறன்மிக்க கொள்முதல், பொதுப் போக்குவரத்து நடத்துநர்களால் அதிக உற்பத்தித்திறன், புதிய குடியிருப்புப் பகுதிகளுக்குச் சேவையாற்றும் வகையில் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு ஏற்ப பேருந்து, ரயில் சேவை ஏற்பாடுகளை உகந்ததாக்குதல் ஆகிய வழிமுறைகளை அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, டௌன்டவுன் ரயில் பாதை திறக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பேருந்து சேவை வழித்தடங்கள் அகற்றப்பட்டன அல்லது மாற்றியமைக்கப்பட்டன.
இறுதியாக, பொதுப் போக்குவரத்துச் செலவுகளில் பயணிகள் தங்களது நியாயமான பங்கைச் செலுத்துவதை உறுதிசெய்யும் வகையில் கட்டணக் கணக்கீட்டு முறை இருப்பது.
சம்பளங்கள், எரிசக்தி, பணவீக்கம் போன்ற காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று திரு ஈஸ்வரன் சுட்டினார்.
பொதுப் போக்குவரத்து மன்றம் தற்போது கட்டணக் கணக்கீட்டு முறையை மறுஆய்வு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முற்பாதியில் அந்நடவடிக்கை நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டிலும் அதற்கு அடுத்த ஆண்டுகளிலும் இடம்பெறும் கட்டண மறுஆய்வு நடவடிக்கைகளின்போது புதிய கட்டணக் கணக்கீட்டு முறை பயன்படுத்தப்படும்.
மறுஆய்வு நடவடிக்கையால் நடப்பிலுள்ள கட்டணக் கணக்கீட்டு முறை எவ்வாறு மேம்படும் என்று கேட்டதற்கு, அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் பயண முறைகள் எவ்வாறு மாறி இருக்கும் என்பதையும் பொதுப் போக்குவரத்து மன்றம் கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாக அமைச்சர் ஈஸ்வரன் பதிலளித்தார்.
எரிபொருள் செலவுகள், எரிபொருள் சந்தை நிலவரம், பணவீக்க நெருக்கடிகள் போன்ற காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

