வாரத்திற்கு நான்கு நாள் வேலை செய்வது உட்பட நீக்குப்போக்கான வேலை நடைமுறைகளுக்கு மாற நிறுவனங்களும் ஊழியர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
"மற்ற வேலை ஏற்பாடுகளைப்போல, நான்கு நாள் வேலை வாரமானது சில ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நல்ல ஏற்பாடாக விளங்கலாம். மற்றவர்களுக்கு அப்படி அமையாமல் போகலாம்.
"நீக்குப்போக்கான மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும். தங்களது தொழிலின், ஊழியர்களின் தேவைகளுக்கு உகந்த சிறந்த வேலை ஏற்பாடுகளை அடையாளம் கண்டு, அவற்றைக் கடைப்பிடிக்கும்படி நிறுவனங்களையும் ஊழியர்களையும் மனிதவள அமைச்சும் முத்தரப்புப் பங்காளிகளும் ஊக்குவிக்கின்றன," என்று திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
சிங்கப்பூரில் நான்கு நாள் வேலை வார நடைமுறைக்கான சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறதா என்றும் அதன் பயன்களையும் சவால்களையும் ஆராயும் வகையில் மனிதவள அமைச்சு சொந்த ஆய்வை மேற்கொள்ளுமா என்றும் ராடின் மாஸ் தொகுதி எம்.பி. மெல்வின் யோங் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திருவாட்டி கான், வெளிநிறுவனங்கள் அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்கின்றனவா என மனிதவள அமைச்சு அறிந்திருக்கவில்லை என்றார்.
அதேவேளையில், அயர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நான்கு நாள் வேலை வாரம் தொடர்பான முன்னோடித் திட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நான்கு நாள் வேலை வாரத் திட்டத்தின் விளைவுகள் சாதக பாதகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உற்பத்தித்திறன், தொழில்சார் செலவுகள், ஊழியர் நல்வாழ்வு போன்றவற்றின் மீதான தாக்கங்கள் அக்கறைக்குரியவையாக இருக்கின்றன என்றும் திருவாட்டி கான் சொன்னார்.
துறை, வேலை சார்ந்து, சில இடங்களில் உற்பத்தித்திறன் மேம்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன அவர் சொன்னார்.
பொதுத் துறையில் இத்தகைய முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சோதித்துப் பார்க்க அரசாங்கம் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

