எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக சிங்கப்பூரில் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கூடுதலான கப்பல்கள் இங்கு வந்தன.
ஆகஸ்ட்டில் எரிபொருள் விற்பனை 4.12 மில்லியன் டன்னாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.1 விழுக்காடு அதிகம். சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டின. இங்கு எரிபொருள் நிரப்புவதற்காகவே கடந்த மாதம் 3,212 கப்பல்கள் இங்கு வந்தன. கடந்த நவம்பருக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. கடந்த ஜூலையில் 3,181 கப்பல்கள் இங்கு வந்தன.
கடந்த ஜூன் மாதம், குறைவான சல்ஃபர் உடைய எரிபொருளுக்காக கப்பல் உரிமையாளர்கள் டன்னுக்கு ஏறக்குறைய US$1,000 செலுத்தினர். இந்த வகை எரிபொருள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
ஜூலையில், எரிபொருள் டன்னுக்கு US$800க்கும் US$900க்கும் பரிவர்த்தனை செய்யப்பட்டது. ஒப்புநோக்க, சல்ஃபர் அதிகம் கொண்ட எரிபொருள் விற்பனை ஆகஸ்ட்டில் 1.2 மில்லியன் டன்னாக சற்று குறைந்தது.

