அனுஷா செல்வமணி
இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் புகழ்பெற்ற இந்திய ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது (படம்) பங்கேற்கிறார்.
"சித்திரமும் அடையாளமும்: வரைகலை வரலாற்றில் தமிழ் அடையாளத்தின் பரிணாமம்" என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், வரலாற்றைப் பின்புலமாகக்கொண்டு தமது கலைத் திறனை உருவாக்குவது குறித்து அவர் பகிரவிருக்கிறார்.
நவம்பர் 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை நடைபெறவுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், "போர் நிகழாதிருந்தால்: இரண்டாம் உலகப் போரும் சிங்கைத் தமிழ் வரலாற்றுப் புனைவும்", "உணவின்றியேல்: சிங்கப்பூர்த் தமிழ் வாழ்வும் இலக்கியமும்" என உணவு, ஓவியம், போர் இலக்கியங்கள் என்று மாறுபட்ட தலைப்புகளுடன் தமிழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
'எனில்' எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 25வது சிங்கப்பூர் எழுத்தாளர் விழா.
ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூரின் இந்த முன்னணி இலக்கிய விழாவில், உள்ளூர், அனைத்துலக படைப்பாளர்கள் பங்கேற்கும் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் மொழி இலக்கியங்களைக் கொண்டாடும் இவ்விழா, எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் சந்தித்து, கருத்துகள் பரிமாற ஒரு தளமாக விளங்குகிறது.
"நோய்த்தொற்றிலிருந்து மீண்டு, பல இன்னல்களைத் தாண்டி வந்துள்ளோம். நம்பிக்கையுணர்வோடு வாய்ப்புகளைப் பயன்படுத்தி உலக சமூகத்திற்கு இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதே, விழாவின் கருப்பொருளான எனிலின் அர்த்தமாகும்," என விழா இயக்குனர் பூஜா நேன்சி விளக்கினார்.
உள்ளூர்த் தமிழ் இலக்கிய அமைப்புகளான சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, வாசகர் வட்டம் ஆகியவை நிகழ்ச்சிகளில் பங்களிக்கின்றன.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1986ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்ற விழா தற்போது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்வாண்டு விழாவை ஆர்ட்ஸ் ஹவுஸ் நிறுவனம் நடத்துகிறது.
விழா அனுமதி அட்டை வாங்க www.sistic.com.sg என்ற இணையப் பக்கத்தை அணுகலாம். மேல் விவரங்களுக்கு: www.singaporewritersfestival.com.

