பிரிட்டிஷ் தூதர் இல்லத்தில் எலிசபெத் அரசியாரின் பெயரிலான ஆர்க்கிட் மலர்
எலிசபெத் இரண்டாம் அரசியார் கடந்த வாரம் காலமானதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதரின் இல்லத்திற்கு அரசியார் பெயர் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலரை பூமலை இரவல் வழங்கியது. அங்கு அரசியாரின் புகைப்படங்களுக்கு அருகில் இந்த மலர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் இரண்டாம் அரசியார் அரசு பயணமாக 1972ல் முதன்முதலில் சிங்கப்பூருக்கு வருகை அளித்திருந்தார். அப்போது அவரைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
அதன் பின்னர் 1989லும் 2006லும் அவர் இங்கு வந்திருந்தார்.
கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை தொடர்ந்து 4வது மாதமாக சரிவு
கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை தொடர்ந்து நான்காவது மாதமாக ஆகஸ்ட்டில் குறைந்தது. சீன நாள்காட்டியின் ஏழாவது மாதத்தில் வீட்டு விற்பனை குறைவது வழக்கம்.
எனினும், கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை விலைகள் தொடர்ந்து 25வது மாதமாக ஆகஸ்ட்டில் ஏற்றம் கண்டன. கடந்த மாதம் அவை 1.2 விழுக்காடு உயர்ந்ததாக சொத்துச் சந்தை நிறுவனங்களான 99.co, எஸ்ஆர்எக்ஸ் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில், விலைகள் 10.5 விழுக்காடு அதிகரித்தன.
வரும் மாதங்களில் விற்பனைக்கு விடப்படும் புதிய கூட்டுரிமை வீடுகள் அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வீடு விற்போர் அதைக் கருத்தில்கொள்கின்றனர்.
புறநகர் பகுதிகளில் இரு புதிய கூட்டுரிமை வீட்டுத் திட்டங்கள் இவ்வாண்டு உச்ச விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டன.
அங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள ஏஎம்ஓ ரெசிடன்ஸ், பிடோக் சென்ட்ரலில் உள்ள ஸ்கை ஏடன்@பிடோக் விற்பனைத் திட்டங்கள் தொடங்கப்பட்ட நாளிலேயே புதிய வீடுகள் விற்றுவிட்டன.
கடந்த மாதம் 1,135 வீடுகள் கைமாறின. ஜூலையில் விற்கப்பட்ட 1,327 மறுவிற்பனை வீடுகளைவிட இந்த எண்ணிக்கை 14.5 விழுக்காடு குறைவு.
வியட்னாம் பிரதமருடன் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சந்திப்பு
சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின்னும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தங்கள் நாடுகள் கொண்டுள்ள கடப்பாட்டை நேற்று முன்தினம் மறுவுறுதிப்படுத்தினர். குறிப்பாக மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், புத்தாக்கம் போன்ற புதிய வளர்ச்சி வாய்ப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
வட்டார, அனைத்துலக விவகாரங்கள் பற்றியும் இரு தலைவர்கள் கலந்தாலோசித்தனர். ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது, வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மையை ஊக்குவிப்பது போன்றவை குறித்தும் அவர்கள் பேசியதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங், வியட்னாமுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் ஹனோயில் பிரதமர் சின்னை அவர் சந்தித்துப் பேசினார்.

