ஜூரோங் கடன் வழங்கும் நிறுவனத்தில் தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கொள்ளை
ஜூரோங்கில் செயல்படும் உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனத்தில் தோட்டாக்கள் நிரப்பிய கைத்துப்பாக்கியுடன் கொள்ளையடித்த முன்னாள் துணைக்காவல் துறை (ஏத்தோஸ்) அதிகாரிக்கு 16.5 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
39 வயதாகும் மகடி முகமது முக்தார், 2016ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கிளையைக் கொள்ளையடித்த கனடா நாட்டவரான டேவிட் ஜேம்ஸ் ரோச்சின் உத்தியைப் பின்பற்றித் தானும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கொள்ளையிட்ட நாளில் தனது தேவையைக் காகிதத்தில் எழுதி நிதி நிறுவன ஊழியர்களிடம் காட்டியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, புளோக் 135, ஜூரோங் கேட்வே சாலையில் உள்ள 'ஓடி கிரெடிட்' நிறுவனத்திற்குச் சென்ற மகடி, அந்தக் காகிதத்தை நிறுவன அதிகாரியிடம் காட்டினார்.
அப்போது அவர் சீருடையில் இல்லை. ஆனால் பணி நிமித்தமாக அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்களை நிரப்பி எடுத்துச் சென்றிருந்தார்.
ஊழியரை மிரட்டி 24,800 வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கொள்ளையடித்த மகடி, அதில் 14,000 வெள்ளியைத் தனது வங்கிக் கணக்கில் செலுத்தினார். மீதித் தொகையை நண்பரிடம் கொடுத்தார்.
பின்னர் துணைக்காவல் துறை தலைமையகத்துக்குச் சென்று சீருடையை அணிந்துகொண்டு வழக்கம்போல வேலைக்குச் சென்றார். அதனை அடுத்து ஏறக்குறைய 11,000 வெள்ளியை கடன்முதலைகள் நால்வருக்கு இணைய வங்கிச் சேவையின் மூலம் செலுத்தினார்.
அன்றைய தினம் பணிக்குச் சென்ற 'எஸ்டி எஞ்சினியரிங்' நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் மிரட்டலுக்குப் பயன்படுத்திய துண்டுச் சீட்டைக் கிழித்து வீசினார்.
கொள்ளைச் சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது 15ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்று காவல்துறை குறிப்பிட்டது.
காவல்துறை அதிகாரிகள் மகடி கொள்ளையடித்த பணத்தில் 5,200 வெள்ளி தவிர எஞ்சிய பணத்தை மீட்டுவிட்டனர். மிரட்டல் வாசகம் எழுதப்பட்ட காகிதத்தையும் அதிகாரிகள் மீட்டனர். ஆயுதமேந்திக் கொள்ளையடித்தல் தொடர்பான சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை மகடி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சட்டவிரோதக் கடன்முதலைகள் ஆறு பேரிடம் மகடி சென்ற ஆண்டு கடன் வாங்கினார். அந்தக் கடனை அடைப்பதற்கு கொள்ளையடிக்க முடிவெடுத்த மகடி, அதன் தொடர்பில் இணையத்தில் தகவல் தேடியதாகவும் 'ஓடி கிரெடிட்' நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் இருந்ததால் அதனை அவர் தேர்ந்தெடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

