எஸ்பிளனேட்-தியேட்டர்ஸ் ஆன் த பே கலையரங்கில், பாதுகாப்பான இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு சென்ற ஆண்டு பல்வேறு கலை நிகழ்ச்சி களுக்குப் பார்வையாளர்கள் மீண்டும் அமோக ஆதரவு தந்துள்ளனர்.
நேற்று முன்தினம் எஸ்பிளனேட் சென்ற ஆண்டுக்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிட்டது.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, அங்கு இடம்பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை 2.06 மில்லியன் பேர் கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 1.6 மில்லியன் பேர் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டனர். நேரடியாகக் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 450,000. ஒப்புநோக்க, 2020-21 நிதியாண்டில் 100,000 பேர் மட்டுமே நேரடியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
கலையரங்கின் வருவாய் மெதுவாக அதிகரிப்பதாக எஸ்பிளனேட் தெரிவித்தது. சென்ற நிதியாண்டில் அதன் மொத்த வருவாய் 26 மில்லியன் வெள்ளி. அதற்கு முந்தைய நிதியாண்டில் அது 14 மில்லியன் வெள்ளி ஈட்டியது.
கடைகள் மூலம் கிடைக்கும் வாடகையும் 0.63 மில்லியன் வெள்ளி அதிகரித்து 4.25 மில்லியன் வெள்ளி ஆனது. நிகழ்ச்சிகளுக்கான நிதியாதரவு சென்ற நிதியாண்டில் வெகுவாகக் குறைந்தது. ஒட்டுமொத்தச் செலவும் 27 மில்லியன் வெள்ளிக்குமேல் கூடியது.
வருவாய் குறைந்தபோதும் எஸ்பிளனேட் சென்ற நிதியாண்டில் 1,891 இலவச நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் 379,989 பார்வையாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில், கலையரங்கம், அதிகம் கவனம்பெறாத சமூகத்தினருக்கு நிகழ்ச்சிகள் படைப்பதிலும் உள்ளூர்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கு வதிலும் கவனம் செலுத்தியது. நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பாளர்களுக்கு சலுகை விலையில் நுழைவுச்சீட்டுகளை அது அறிமுகம் செய்தது.
இந்த ஆண்டு 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எஸ்பிளனேட், 30 மில்லியன் வெள்ளி செலவில் சிங்டெல் நீர்முகப்பு அரங்கைக் கட்டிவருகிறது. அடுத்த மாதம் அது திறப்புவிழா காணும்.

