இந்த ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான உள்ளூர் வர்த்தகச் சூழல் நம்பிக்கை மேலும் நலிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக வர்த்தக நம்பிக்கைக் குறியீடு சரிந்துள்ளது. சேவைத் துறை, ஒட்டுமொத்த விற்பனைத் துறை ஆகியவை மேலும் வீழ்ச்சிகண்டது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் வர்த்தக கடன் இலாகா நேற்று வெளியிட்ட அறிக்கையில், நான்காம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கைக் குறியீடு 4.9 விழுக்காட்டுப் புள்ளியாகக் குறைந்துள்ளது. முந்தைய காலாண்டில் அது 5.1 ஆகப் பதிவானது. சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அது 5.78 விழுக்காட்டுப் புள்ளியாக இருந்தது.
பொதுவாக விற்பனை அளவு, நிகர லாபம், விற்பனை விலை, புதிய கொள்முதல் ஒப்பந்தங்கள், சரக்குக் கையிருப்புப் பட்டியல், வேலை வாய்ப்பு ஆகிய ஆறு அம்சங்களும் வர்த்தக நம்பிக்கைக் குறியீட்டை நிர்ணயிக்கின்றன.
இவற்றில் ஐந்து அம்சங்கள், மூன்றாம் காலாண்டில் இருந்த நிலையிலேயே தொடர்கிறது. ஆறில் மூன்று அம்சங்கள், காலாண்டு அடிப்படையில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
சென்ற ஆண்டு 9.63 விழுக்காட்டுப் புள்ளியாக இருந்த நிகர லாபம் பூஜ்ஜியம் விழுக்காட்டுப் புள்ளியாக வீழ்ச்சிகண்டது.
சென்ற ஆண்டு 12.12 விழுக்காட்டுப் புள்ளியாகப் பதிவான வேலைவாய்ப்பு விகிதம், இம்முறை 8.96 விழுக்காட்டுப் புள்ளி ஆனது.
போக்குவரத்து, நிதி, உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளில் வர்த்தகச் சூழல் நம்பிக்கை மற்ற துறைகளைக் காட்டிலும் அதிகம் பதிவானதாக அறிக்கை கூறியது.
சேவை, மொத்த விற்பனை ஆகிய துறைகளில் துறையில் நம்பிக்கைக் குறியீடு குறைந்துள்ளது.
உள்ளூர் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு குறைவதற்கு, ஏற்றுமதித் தேவை குறைவதும் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பதும் ஒட்டுமொத்த உலகளாவிய வளர்ச்சி மெதுவடைந்திருப்பதும் காரணங்கள் என்று சிங்கப்பூர் வர்த்தக கடன் இலாகாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆட்ரே சியா குறிப்பிட்டார்.
இருப்பினும் அனைத்துலக விமானப் போக்குவரத்துத் துறை வலுவாக மீட்சிகாணும் வேளையில் வாடிக்கையாளர்களுக்கு நேரடிச் சேவை வழங்கும் துறைகளும் மீட்சியடைவதால் போக்குவரத்து, கட்டுமானம் ஆகிய துறைகளில் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு மேம்பட்டிருப்பது கண்கூடு என்றார் அவர்.

