இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கூடுதலாக 20% வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் விற்கப்படும் இந்திய அரிசியின் விலை ஏறக்கூடும்.
இந்தியாவிலிருந்து வரும் அடுத்த ஏற்றுமதி சிங்கப்பூருக்கு வந்தபிறகு அதன் விலையை 20% ஏற்றப்போவதாக முஸ்தஃபா சென்டர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது. அரிசி இறக்குமதியில் பிரச்சினை இல்லை என்றும் அதன் விலைதான் ஏறும் என்றும் முஸ்தஃபா சென்டர் நிர்வாகி திரு சலீம் கூறினார்.
சென்னை டிரேடிங்ஸ் சூப்பர் மார்கெட் நிறுவனம் பாசுமதி அரிசி நீங்கலாக அனைத்து 25 கிலோ அரிசி மூட்டையின் விலையை $5 உயர்த்துகிறது. இதனால் தம்மிடமிருந்து பெருமளவு அரிசி வாங்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் தம்மிடம் அரிசி வாங்கத் தயங்குவதாக அந்நிறுவனத்தின் திரு வி.ராமமூர்த்தி கூறினார்.
இந்திய அரிசி வரியால் சிங்கப்பூரில் அரிசிக்குத் தட்டுப்பாடு இருக்காது, ஏனெனில் சிங்கப்பூர் வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்கிறது. அங்கிருந்து வரும் அரிசி ஏற்றுமதி சீராக உள்ளது. மேலும் உள்ளூரில் உள்ள அரிசி கையிருப்புத் திட்டத்தால் அரிசி விநியோகத்திற்கும் விலைக்கும் அதிக பாதிப்பு இருக்காது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விக்கு வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்தது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் சிங்கப்பூருக்குப் போதிய அரிசி இருப்பதை அது உறுதி செய்யும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இந்தியாவில் இவ்வாண்டு சராசரிக்கும் குறைவாகப் பருவமழை பெய்ததை அடுத்து, நெல் பயிரிடுவது குறைந்துள்ளது. இதனால் உள்ளூரில் அரிசி விநியோகத்தைச் சீர்படுத்தி, விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நொய்யரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.
அத்துடன், புழுங்கல் அரிசி நீங்கலாக, பாசுமதி அரிசி அல்லாத மற்ற வகை அரிசிகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியாடவிமிருந்து $59.8 மில்லியன் மதிப்புள்ள அரிசியை 2020ஆம் ஆண்டு இறக்குமதி செய்தது. அதே ஆண்டு சிங்கப்பூர் வியட்னாமிடமிருந்து $57.3 மில்லியன் மதிப்புள்ள அரிசியையும் தாய்லாந்திலிந்து $123 மில்லியன் மதிப்புள்ள அரிசியையும் இறக்குமதி செய்துள்ளது.

