ரோலெக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்பட பல ஆடம்பரப் பொருள்கள் மோசடியில் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் டிரேட்நேஷன், டிரேட்லக்சரி ஆகிய இரு நிறுவனங்கள் மீது ஆறு சிவில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
அப்பொருள்களுக்காகப் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் பணம் கட்டியும் அவர்களுக்குப் பொருள்கள் வந்து சேரவில்லை. அதனால் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு அந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.
கிட்டத்தட்ட $6.7 மில்லியன் மொத்த தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் பணம் கட்டியும் பொருள் வந்து சேராததற்காக மேற்கண்ட இரு நிறுவனங்கள் மீதும் 180 புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட மொத்த மதிப்பு $32 மில்லியன்.
இரு நிறுவனங்களையும் ஒரு தம்பதி நிர்வகித்து வந்தனர்.
பி ஜியாபெங், 26, என்ற ஆடவரும் தாய்லாந்து நாட்டவரான பன் சுக் சிரிவிப்பா என்ற 27 வயதுள்ள அவருடைய மனைவியும் மலேசியாவில் பதிவான லாரி ஒன்றில் கள்ளத்தனமாக கடந்த ஜூலை 4ஆம் தேதி தப்பி மலேசியாவுக்குச் சென்றனர்.
அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள மலிவு ஹோட்டல் ஒன்றில் மலேசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

