சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் லிம் கியா டோங் நேற்று காலமானார். அவருக்கு வயது 70.
திரு லிம், 40 ஆண்டுகால அனுபவம் உள்ள வழக்கறிஞர் ஆவார். 'இன் டாட் ஆகஸ்ட்டின் அண்ட் பார்ட்னர்ஸ்' சட்ட நிறு வனத்தில் குற்றவியல் துறைக்கு அவர் தலைமை தாங்கினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அவர் முதன்முதலாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவரானார்.
அவரது 'எல்கேடி' அணி திரு பில் இங் என்பவரின் 'கேம் சேஞ்சர்ஸ்' அணியை வென்று சங்கத்தில் பொறுப்புக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் அவர் போட்டியின்றி வெற்றி பெற்று மீண்டும் தலைவர் ஆனார்.
"தாம் நேசித்த விளையாட்டுக்கு அர்ப்பணிப்புமிக்க பணியாளராக இருந்தார்." என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வருணித்தது.
ஜாலான் பசார் விளையாட்டரங்கத்தில் உள்ள தனது அலுவலகத்தின் முகப்பில் திரு லிம்முக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடத்தை சங்கம் அமைத்திருக்கிறது. இன்று முதல் பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்தலாம்.
காலஞ்சென்ற திரு லிம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் ஆன பின்னர், தற்போது சிங்கப்பூர் காற்பந்து லீக் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தொழில்முறை சாரா போட்டியை மேற்பார்வையிட்டார்.
அதன் ஆதரவாளராக 'அஜினோமோட்டோ' நிறுவனத்தை அவர் கொண்டுவந்தார். அப்போட்டி காப்புறுதி பெற உதவினார்.
மேலும், 2017ல் அப்போட்டி நடத்தப்பட்ட தேதிகளை முறைப்படுத்த உதவியதுடன், ஆட்டங்கள் நடப் பதற்கான இடங்களையும் அவர் ஏற்படுத்தித் தந்தார்.
உலக காற்பந்துத் துறையிலும் திரு லிம் பெரிதும் மதிக்கப்பட்டார்.
'ஃபிஃபா' எனப்படும் அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் ஒழுங்குநடவடிக்கைச் செயல்குழுவின் துணைத் தலைவராகவும் ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பின் தலைவராகவும் அவர் இருந்தார்.
மனைவி, 31 வயது மகள், 30 வயது மகன் ஆகியோரை திரு லிம் விட்டுச் செல்கிறார். இருவருமே வழக்கறிஞர்கள் ஆவர்.
திரு லிம் காலமானதை அடுத்து, புதிய தலைவரை அவசரமாகத் தேர்வு செய்யப்போவதில்லை என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் கூறியது.
சங்கத்தின் விதிமுறைகளின்படி, அதன் அடுத்த மாநாடு கூடும் வரை தற்போதைய துணைத் தலைவர் பெர்னார்ட் டான் இடைக்காலத் தலைவராக செயல்படுவார். சங்கத்தின் அடுத்த மாநாடு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
போதிய அவகாசம் இல்லாததால் அன்று தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.

