சொகுசுக் கப்பல் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் ஆகியவை அளவுக்கு அதிக முன்புதிவுகள் ஏற்றுக்கொள்ளும் நடைமுறை பற்றி 'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடனும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துட னும் கலந்து பேசவுள்ளது.
மரினா பே சொகுசு கப்பல் பயண நிலையத்தில் கடந்த 4ஆம் தேதி, 'ஜெண்டிங் டிரீம்' கப்பல் பயணத்துக்கு பதிவுசெய்த 100 பேருக்கு இடம் கிடைக்கவில்லை.
அளவுக்கு அதிகமான முன் பதிவுகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டதால் பயணிகள் திருப்பி விடப்பட்டனர்.
இவ்வாண்டு இத்தகைய மிதமிஞ்சிய முன்பதிவுகள் குறித்த மூன்று புகார்கள் கிடைத்திருப்பதாக 'கேஸ்' அமைப்பின் தலைவர் மெல்வின் யோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
கிருமிப் பரவலுக்குப் பின்னர் பயணங்கள் மீண்டும் அதிகரிப்பதால் முன்பதிவுப் பிரச்சினைகள் கூடலாம் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பயனீட்டாளர் களுக்கு இழப்பீடு வழங்குவதை விதிமுறைகளுக்கு உட்படுத்துவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று திரு யோங் முன்னதாகக் கூறியிருந்தார்.

