செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
22977b67-3cd2-47e0-9b0b-03e164f62948
-

இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஜி-20 மாநாடு; சிங்கப்பூருக்கு அழைப்பு

அடுத்த ஆண்டு செப்டம்பர் 9ஆம், 10ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்தியா சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜி-20 அமைப்பு, 19 பொருளியல்கள் அடங்கிய கூட்டமைப்பாகும். இந்தியா, ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 30ஆம் தேதி வரை ஏற்கவுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்தியாவின் முன்னுரிமைகளை செயல்படுத்த, ஜி-20ல் இந்தியாவின் தலைமையுடனும் மற்ற நாடுகளுடனும் இணைந்து ஆக்ககரமாகப் பணியாற்றுவதை சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

மனித உடல் நுண்ணுயிர் ஆய்வு நிலையம்

நாள்பட்ட நோய்களையும் உடல் பருமனையும் எதிர்க்க மனித உடலுக்குள் வாழும் நுண்ணுயிர்கள் உதவலாம்.

அதன் தொடர்பில் புதிய ஆய்வு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மனித உடல் நுண்ணுயிர்

ஆய்வு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ் இருவரும் நிலையத்தைத் திறந்துவைத்தனர். நாள்பட்ட நோய்களுக்கும் மனித உடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றி நிலையம் ஆய்வு செய்யும். பரிசோதனை முறைகளையும் சிகிச்சைகளையும் மேம்படுத்த ஆய்வு முடிவுகள் உதவும்.

"நம் உடலுக்குள் பல ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. நலமிக்கவர்களின் உடலில் நுண்ணுயிர்கள் அமைதியாக இருக்கும். நலமில்லாதவர்களின் உடலில் நுண்ணுயிர்கள் சமநிலையில் இல்லாததால், உடல்பருமனும் இதய நோய், புற்றுநோய், நுரையீரல், தோல் தொடர்பான நோய்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்," என்று பேராசிரியர் சுரேஷ் கூறினார்.

தேசிய சின்னங்களாகும் தேசிய பற்றுறுதி, தேசிய மலர், சிங்கத்தலை

தேசிய பற்றுறுதி, தேசிய மலரான வாண்டா மிஸ் ஜோக்கிம், சிங்கத்தலை (மெர்லயன்), அரசாங்க முத்திரை ஆகியவை தேசிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் அது குறித்த சட்டத்திருத்தத்தை நேற்றுமுன்தினம் ஏற்றுக்கொண்டது. தேசிய கொடி, தேசிய கீதம், தேசிய கேடயச் சின்னம் ஆகியவை ஏற்கெனவே சிங்கப்பூரின் தேசிய சின்னங்களாக விளங்குகின்றன.

தேசிய கொடி போன்ற தேசிய சின்னங்கனைப் பயன்படுத்துவதில் கூடுதல் நீக்குப்போக்கு இருக்கும் வகையில் தேசிய சின்னச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், தேசிய சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டது.

ஏழு தேசிய சின்னங்களையும் அதிபரின் சின்னங்களையும் தவறாகப் பயன்படுத்துவோருக்கு $30,000 வரையிலான அபராதம் அல்லது ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறைபாடு உள்ளவர்களுக்காக

மேற்கில் வேலைவாய்ப்பு நிலையம்

குறைபாடு உள்ளவர்களுக்காக அரசாங்க செலவிலான வேலை வாய்ப்பு நிலையம் சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

செங்காங் குழுத்தொகுதி நாடாளுன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதைத் தெரிவித்தார்.

'எனேபலிங் பிஸ்னஸ் ஹப்' எனும் துணைபுரியும் வர்த்தக மையங்கள், தங்களது தேவைகளுக்கு ஏற்ற முறையான சூழலும் வேலை உதவியும் தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்கும். ஒவ்வொரு மையமும் குறைபாடு உள்ளவர்களை வேலையில் சேர்க்கும். மற்றவர்களையும் அவை வேலைக்குத் தயார்ப்படுத்தும்.

மேற்கு வட்டாரத்தில் முன்னோடி நிலையம் தொடங்கப்பட்ட பின்னர், மற்ற வட்டாரங்களிலும் அத்தகைய மையங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.