உலகளாவிய பயணங்கள் மீண்டும் தொடங்குவதாலும் உள்நாட்டு கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் தங்குமிடம், உணவு - குளிர்பானம், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் அதிகமான ஊழியர் சேர்ப்பு இடம்பெறுகிறது.
மனிதவள அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி, போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து, அது தொடர்புடைய சேவைகளில் துப்புரவாளர்கள், சாதாரண ஊழியர்கள் சேர்ப்பு எண்ணிக்கை வலுவாக இருந்தது. இது அனைத்து துறைகளிலும் ஆக அதிகமாக, 11.6 விழுக்காடாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவாக அதிகரித்த விமானப் போக்கு வரத்து அளவைச் சமாளிக்க ஆட்சேர்ப்பு அதிகரித்துள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு விகிதங்கள் 2014ஆம் ஆண்டில் காணப்பட்ட விகிதத்திற்கு உயர்ந்த அதேநேரத்தில், அனைத்து துறைகளிலும் வேலையில் இருந்து விலகும் விகிதம் சீராகவே இருந்தது. இது முதலாளிகள் ஊழியர்களைச் சேர்ப்பதுடன், அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதையும் குறிக்கிறது.
விமானப் பயணிகள், அனைத்துலக வருகைகளின் வலுவான மீட்சியினால் பயணத்துறை, விமானப் போக்குவரத்து தொடர்பான துறைகள் தொடர்ந்து பயனடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊழியர் சந்தை தொடர்பாக மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
விமானப் போக்குவரத்து மற்றும் அதன் துணை சேவைகளுக்கான ஒட்டுமொத்த மாதாந்திர ஆட்சேர்ப்பு விகிதம் இரண்டாம் காலாண்டில் சராசரியாக 3.6% ஆக இருந்தது, இது முதல் காலாண்டின் 0.8%ஐ விட வேகமான அதிகரிப்பாகும்.
ஆட்சேர்ப்பு இருந்தபோதிலும், உற்பத்தி, போக்குவரத்துத் துறையிலும் துப்புரவாளர்கள், சாதாரண ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து 17 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. தங்குமிட வசதி துறையிலேயே இதே அளவான காலி இடங்கள் உள்ளன. இரண்டாம் காலாண்டில் தங்குமிட வசதி துறையின் சராசரி மாதாந்தர ஆட்சேர்ப்பு விகிதம் 4.7% ஆக இருந்தது. வேலையிலிருந்து விலகும் விகிதம் இதே காலப்பகுதியில் சராசரியாக 3.6% ஆக இருந்தது.
ஆக அதிகமாக, இத்துறையில் ஒட்டுமொத்த காலியிட விகிதம் 11.1% ஆக உள்ளது. எழுத்தர், விற்பனை மற்றும் சேவைத் துறையினருக்கான காலி இடங்கள் 12% ஆக உள்ளது.
தங்குமிட வசதி துறையில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் வேலையில் இருந்து விலகும் மாதாந்தர சராசரி விகிதம் 3.6% இது இரண்டாம் காலாண்டில் 3.4% ஆக இருந்த ஆட்சேர்ப்பு விகிதத்தைவிட அதிகம்.
தொடர்ந்து நான்காவது காலாண்டாக, பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட வேலையிலிருந்து விலகும் விகிதம் 1.7 ஆக இருப்பதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு விகிதம் 2.6% ஆக உயர்ந்துள்ளது.

