தனது கட்சிக்காரரின் பணத்தில் 33 மில்லியன் வெள்ளி கையாடி, சிங்கப்பூலிருந்து தப்பி ஓடிய வழக்கறிஞர் ஜெஃப்ரி ஓங் சு அன் வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜேஎல்சி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக பங்காளியான ஜெஃப்ரி ஓங் சு ஆன், நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டு, சட்டத் தொழில் (தொழில்முறை நடத்தை) விதிகள் பலவற்றை மீறியதாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
ஓங்கின் குற்றவியல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவர் தற்போது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உட்பட 76 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சிங்கப்பூரில் ஒரு வழக்கறிஞர் கையாடிய பணம் தொடர்பான குற்றங்களில் ஆக அதிக தொகையிலானது என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
ஓங் சிங்கப்பூலிருந்து தப்பி ஓடியதாகவும், அவரைப்போல் தோற்றம் கொண்ட ஆடவரின் திருடப்பட்ட மலேசிய கடப்பிதழுடன் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அவர் ஜூன் 2019 முதல் விசாரணையில் இருக்கிறார். 45 வயதான ஓங், சாங்கி சிறைச்சாலையிலிருந்து காணொளி இணைப்பு மூலம் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். கடந்த ஆண்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
அவர் ஏதாவது சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டபோது, வழக்கறிஞர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்ற சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் வாதத்தை தாம் ஒப்புக்கொள்வதாக ஓங் கூறினார். "இது தொடர்பாக அடிப்படைக் காரணங்களும், சூழ்நிலையும் நிலவியபோதிலும், தற்போதைய வழக்கு நடவடிக்கைகளுக்கு அவை பொருத்தமானவை அல்ல," என்றார் அவர்.
அலைட் டெக்னாஜலிஸ் மொத்தம் 33,153,416.56 டாலர் தொகையை ஓங்கின் நிறுவனத்தில் வைத்திருக்க ஒப்புக்கொண்டதாக தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதிகள் டே யோங் குவாங், ஜுடித் பிரகாஷ் ஆகியோரை உள்ளடக்கிய நீதிமன்றம் அறிந்தது.
அந்த நிறுவனம் தான் தெரிவிக்கும் வகையில் அந்தத் தொகையை அலைட் டெக்னாலஜிஸ் எப்பொழுது, யாருக்கு எப்பொழுது விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கும்வரை ஓங்கின் நிறுவனம் அந்தப் பணத்தை வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வழக்கறிஞர் சங்கத்திடம் அலைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் புகார் அளித்தது.

