கொவிட்-19 கிருமித்தொற்றால் 3 வயது சிறுமி மரணம்; சிறார்களிடையே மூன்றாவது மரணம்

கொவிட்-19 கிருமித்தொற்றால் 3 வயது சிறுமி மரணம்; சிறார்களிடையே மூன்றாவது மரணம்

1 mins read
f996d570-7a41-4f98-9646-92fc464a4f85
-

சிங்கப்பூரில் மூன்று வயது சிறுமி கொவிட்-19 கிருமித் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று(செப்டம்பர் 14) தெரிவித்துள்ளது. கிருமித் தொற்றால் 12 வயதுக்குக் கீழ் உள்ளவர் மாண்டிருப்பது இது மூன்றாவது முறை.

ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறுமிக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.

நேற்று முன்தினம் ( செப்டம்பர் 13) சிறுமியின் இதயம் செயலிழந்து அதனால் அவளது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சிறுமி உயிர் இழந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

அச்சிறுமிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதற்கு முன்பாகவே ஏற்கெனவே பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

சுகாதார அமைச்சு மாண்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

இதற்கு முன்னர் ஒன்றரை வயதுடைய சஹீர் ரயீஸ் அலி எனும் சிறுவன் கொவிட்-19 கிருமியாலும் மேலும் இரு கிருமிகள் தொற்றியதாலும் கடந்த ஜூன் மாதம் உயிர் இழந்தான். அதற்கு அடுத்த மாதம் நான்கு வயது ரஸியா உஃபைரா முகம்மது எனும் சிறுமியும் கொவிட்-19 கிருமித் தொற்றால் உயிரிழந்தாள்.