தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் காமன்வெல்த் விளையாட்டுகளிலும் பதக்கங்கள் வென்றதற்காக நீச்சல் வீரர்கள் ஜோசஃப்
ஸ்கூலிங்கிற்கும் அமெண்டா லிம்மிற்கும் வழங்கப்படவிருந்த பரிசுத்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் காமன்வெல்த் விளையாட்டுகளிலும் பதக்கங்கள் வென்ற
சிங்கப்பூர் வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு (செப்டம்பர் 14) நடைபெற்றது.
சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றம் நடத்தும் எம்ஏபி (MAP) திட்டம் மூலம் ஒலிம்பிக், ஆசியான், காமன்வெல்த், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
68 விளையாட்டாளர்களுக்கு மொத்தம் $860,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன- தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காக $495,000, காமன்வெல்த் போட்டிகளுக்காக $365,000.
ஸ்கூலிங் வியட்னாமில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இரண்டு தங்கப்பதக்கங்கள், ஒரு வெண்கலப்பதக்கம் வென்றதற்காக மொத்தம் $13,750 பெற்றிருக்கவேண்டும். அமெண்டா லிம் அதே போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக $3,750 பரிசுத்தொகை பெற்றிருப்பார்.
வெளிநாட்டில் கஞ்சா உட்கொண்டதால் இருவருக்கும் பரிசுத்தொகை வழங்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று அறியப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஜோசப் ஸ்கூலிங்கும் அமெண்டா லிம்மும் கலந்துகொள்ளவில்லை.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்றதற்காக மேசைப்பந்து வீராங்கனை ஃபெங் டியென்வெய், 36, ஆக அதிகமாக $85,000 பரிசுத்தொகையைப் பெற்றார். வியட்னாமில் நடைபெற்ற தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூர் மொத்தம் 47 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.

