போதைப்பொருள் தொடர்பாக
சிங்கப்பூர் கொண்டிருக்கும் கொள்கைகளும் விதிக்கப்படும் தண்டனைகளும் சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை என்றும் அவை வெளிநாடுகள், மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள், அனைத்துலக நாளிதழ்கள் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்டவை அல்ல என்றும் புளூம்பர்க்கிற்கு அளித்த பேட்டியில் சட்ட, உள்துறை அமைச்சர்
கா. சண்முகம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
வட்டார நாடுகளில் கட்டுப்
படுத்தப்பட்ட பயன்பாட்டின்கீழ் கஞ்சா கொண்டு வரப்பட்டுள்ளதால் அது சிங்கப்பூருக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று புளூம்பர்க் தொலைக்காட்சியின் ஹஸ்லிண்டா அமின் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திரு சண்முகம், போதைப்பொருள் பெருமளவில் எளிதில் கிடைக்கும் சூழல் எழுவதால் கூடுதல் சவால்களை அது உருவாக்குவதாகக் கூறினார். இருப்பனும், போதைப்பொருள் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோரிடம் நல்லதொரு புரிதல் இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து கஞ்சா உட்கொள்வது தாய்லாந்தில் சட்டவிரோதமாகாது.
மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக மலேசிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
"கஞ்சா உட்கொள்வதை அனு
மதிக்க வேண்டும் என்று சிலர் கருது கின்றனர். சில ஊடகங்கள் வாயிலாக கஞ்சாவைப் பற்றி வெளி
யிடப்படும் தகவல்களால் அதைப் பற்றி இளையர்கள் சிலருக்கு, அதில் எவ்விதத் தவறும் இல்லை என்ற எண்ணமும் கருத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கிறது.
"சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கைகள் கோலாலம்பூரிலோ பேங்காக்கிலோ உருவாக்கப்படுபவை அல்ல. சிங்கப்பூரின் கொள்கைகள் 400 பேராலோ, மூன்று அல்லது நான்கு அனைத்துலக நாளிதழ்களாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை," என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
சுவூடனில் போதைப்பொருளுடன் தொடர்புடைய கும்பல்களால் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதையும் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமான போதைப்பொருளை உட்கொண்டு மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் திரு சண்முகம் சுட்டினார்.
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறை முடிவுக்கு வருமா என்று அமைச்சர் சண்முகத்திடம் திருவாட்டி ஹஸ்லிண்டா கேட்டார்.
சிங்கப்பூருக்குள் போதைமிகு அபினைக் கடத்திய குற்றத்துக்காக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் அண்மையில் தூக்கிலிடப்பட்டார்.
அதற்கு முன்பு அவருக்குக் கருணை அளிக்கும்படி மனித உரிமை அமைப்பினரும் பிரிட்டிஷ் செல்வந்தர் ரிச்சர்ட் பிரான்சனும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
சிங்கப்பூரர்கள் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்ற தவறான புரிதல் நிலவுவதாக திரு சண்முகம் தெரிவித்தார்.
மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் 400 பேர் கலந்துகொண்டதாக அவர்கள் கூறியதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.
ஆனால் உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூரர்களில் 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூருக்கும் நலம் தரும் அணுகு
முறைகளை நடைமுறைப்படுத்துவது சிங்கப்பூர் அரசாங்கத்தின் கடமை என்றார் அமைச்சர் சண்முகம். மரண தண்டனை நடப்பில் இருப்பதன் மூலம் மிக மோசமான, ஆபத்தான குற்றங்களைத் தடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் நம்புவதாக திரு சண்முகம் தெரிவித்தார்.

