செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
419a047f-f8b9-443f-97c8-de13ce1a6948
-

$4.5 மி. தொடர்பான மோசடி: மூவருக்கு தொடர்பு என்று குற்றச்சாட்டு

கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட $4.5 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை பல்வேறு உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிட்ட மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதன் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள் மீது நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சீன நாட்டவர்களான 37 வயது ஸுவாங் சியான்பாவ், 37 வயது லியு சின், 39 வயது லியு ஜியான்னான் ஆகியோரே அந்த மூவர். இந்தக் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன் கிழமையும் கைது செய்யப்பட்ட அறுவரில் இந்த மூவரும் அடங்குவர்.

ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய வங்கிக் கணக்கு களைத் தனக்குத் தெரியப்படுத்தினால், அதற்குரிய சன்மானம் வழங்கப்படும் என்று ஸுவாங் இணையத்தில் விளம்பரம் செய்ததை அடுத்து, பலர் அவற்றை அவரிடம் தெரியப்படுத்தினர். மேலும் ஸுவாங்குக்கு முன்பதிவு செய்யப்பட்ட பணம் செலுத்திய சிம் அட்டைகளும் கிடைத்தன என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது. பெயர் தெரியாத அந்த நபர்களுக்குத் தலா குறைந்தது $800 கொடுக்கப்பட்டது என்றும் முன்பதிவு செய்யப்பட்ட பணம் செலுத்திய சிம் அட்டைகளுக்குத் தலா $50 கொடுக்கப்பட்டது என்றும் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஸுவாங் குற்றச்செயல்களிலிருந்து பெறப்பட்ட அந்தப் பணத்தை வங்கிக் கணக்குகளிலிருந்து எடுத்தார் என்று நம்பப்படுகிறது. 20 மற்றும் 51 வயதுள்ள இரு பெண்கள், வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து ஸுவாங்கிடம் கொடுத்ததால் அவர்களும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்டது. மற்றொரு வங்கிக் கணக்குக்குச் சொந்தமானவரான 32 வயது ஆடவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களையும் எடிஎம் அட்டை யையும் ஸுவாங்குக்கு விற்றுள்ளார்.

இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தாங்கள் தயங்க மாட்டோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஸுவாங், லியு சின், லியு ஜியான்னான் மூவரின் வழக்கு இம்மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஒரு 'நக்கல்-டஸ்டர்' (படம்), மடக்கக்கூடிய நீண்ட இரும்புப் பிரம்பு முதலிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 21 வயது முகமது டனிஷ் அம்சியார் அலி அம்ரன் எனும் ஆடவர் மீது நான்கு குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, 'நக்கல்-டஸ்டர்' ஆயுதத்தை அவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தார்.

முன்னைய குற்றத்தின் காரணமாக அவர் அணிந்திருக்க வேண்டிய மின்னணுவியல் கண்காணிப்புக் கருவியை டனிஷ், வெட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி வீசி எறிந்துவிட்டார். வேலை விடுதலை திட்டத்தின் அடிப்படையில் அவர் வேலை முடிந்து அன்று இரவு சாங்கி சிறைச்சாலை வளாகத்துக்குத் திரும்ப வேண்டும். ஆனால் அவர் வரவில்லை.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பூகிஸ் பகுதியில் அந்த ஆயுதங்களுடன் டனிஷ் பிடிபட்டபோது, அவர் ஓட்டம் எடுத்தார். காவல்துறையினர் பென்கூலன் ஸ்திரீட்டில் அவரை மடக்கிப் பிடித்தனர் என்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கை கூறியது. டனிஷுக்கு பிணை மறுக்கப்பட்டது. அவர் இம்மாதம் 30ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலை யாக வேண்டும்.

பாதுகாப்புக் கவனக்குறைவால் விபத்து: நிறுவனத்துக்குத் தடை

மூன்று மாடி உயரக் கூரையிலிருந்து விழுந்து படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் இரண்டு வாரத்துக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பியுள்ளார்.

இம்மாதம் 1ஆம் தேதி, லெ ஃபோங் பில்டிங் சர்விசஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் எட்டு மீட்டர் உயரத்தில் விளக்கு பொருத்தும் மேடை உடைந்ததால் அங்கிருந்து கீழே விழுந்தார். அந்த ஊழியர் கடந்த செவ்வாழ்க்கிழமை மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பி விட்டார் என்று மனிதவள அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

அதிகரித்து வரும் வேலையிட மரணங்கள், காயங்களின் காரணமாக இம்மாதம் 1ஆம் தேதி அறிமுகமான திருத்தி யமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி, புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ள முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.