இந்தியாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

இந்தியாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

3 mins read
c66313ca-59f1-431d-b446-d7b16d9e8562
இந்தோனீசியாவில் இவ்வாண்டு ஜூலை மாதம் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்(வலது). படம்: திரு லாரன்ஸ் வோங் டுவிட்டர் -

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவர் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22 வரை அங்கு இருப்பார்.

துணைப் பிரதமராக திரு வோங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

பிரதமர் அலுவலகம் இன்று (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்களைத் தெரிவித்தது.

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டில்(ISMR) திரு வோங் கலந்துகொள்வார். அவருடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ் ஈஸ்வரன் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் புதிய துறைகளில் இரு தரப்பும் பயனடையும் கூட்டு முயற்சிகளையும் வாய்ப்புகளையும் கண்டறியவும் இந்த புதிய அமைச்சர்நிலை தளம் உதவும்.

இந்தியா சார்பில் அதன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வர்த்தக, தொழில் துறை, நுகர்வோர் துறை, உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் பியுஷ் ஜோயல் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

துணைப் பிரதமர் செப்டம்பர் 18ஆம் தேதி குஜராத் மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கே அவர் குஜராத் முதலமைச்சர் பூப்பேந்திரபாய் பட்டேலைச் சந்திப்பார். குஜராத் அனைத்துலக நிதி நகரத்தையும் துணைப் பிரதமர் வோங் பார்வையிடுவார்.

திரு வோங் மூத்த இந்திய தலைவர்களையும் பிரபலங்களையும் அவரது பயணத்தின்போது சந்திப்பார். அவருடன் வெளியுறவு, நிதி அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியாவுக்குச் செல்வர்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கு இடையே பொருளியல், வர்த்தக, தற்காப்பு போன்ற பல துறைகளில் கூட்டுறவு வலுவாக உள்ளது. குறிப்பாக இருநாட்டு பொருளியல், நிதித்துறை கூட்டுறவு முக்கிய தூண்களாக அமைகின்றன. இரு நாடுகளுக்கும் பொதுவான இணைய கட்டண முறை திட்டப் பணிகள் 2021ல் தொடங்கி இவ்வாண்டு நவம்பர் மாதம் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் நிறைவுற்ற பிறகு கைபேசி மூலம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பலாம், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் மெய்நிகர் கட்டண முறை மூலம் பணம் அனுப்பலாம்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மதிப்பு 2021ல் $26.8 பில்லியனை எட்டியது.

2020-2021 காலகட்டத்தில், கொவிட்-19 சூழலிலும் இந்தியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு செய்த நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்ந்தது. அப்போது சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு $24.56 பில்லியன்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 9,000 இந்திய நிறுவனங்கள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 440 சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்று சிங்கப்பூருக்கான இந்திய தூதரக அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

வர்த்தக உறவைக் கடந்து இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் கலாசார ரீதியாக நெருங்கிய தொடர்பு பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது.

திரு வோங் கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்தியப் பயணம் மேற்கொண்டார். அப்போது புது டெல்லியில் நடைபெற்ற உலக பொருளியல் உச்சநிலை மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்.