சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக உயர்ந்தபோதும், மின்னணுவியல் ஏற்றுமதி கிட்டத்தட்ட ஈராண்டுகளில் முதல்முறையாகக் குறைந்துள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதைத் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 11.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
புளூம்பெர்க் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 8.4 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இந்த விகிதம் அதிகமாகும்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு ஜூலையில் 7 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இது அதிகம்.
ஆனால் மாத அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 3.9 விழுக்காடு குறைந்தது. ஜூலையில் அது ஏற்றங்கண்டிருந்தது.
கடந்த ஜூலையில் 17.8 பில்லியன் வெள்ளி எண்ணெய் சாரா பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஒப்புநோக்க, ஆகஸ்ட் மாதத்தில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி சற்று குறைந்து 17.1 பில்லியன் வெள்ளியாக இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஏற்றுமதி மதிப்பான $15.8 பில்லியனைவிட இது அதிகம்.
ஆகஸ்ட் மாதத்தில் மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி குறைந்த வேளையில் மின்னணுவியல் சாரா ஏற்றுமதி உயர்ந்தது.
மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி குறைந்ததற்கு ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், வட்டுகள், கணினி பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்திக் குறைவு பெரும்பங்கு வகித்தது.
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 60 விழுக்காடு உயர்ந்தது. ஜூலை மாதத்தில் அந்நாட்டுக்கான ஏற்றுமதி 10.9 விழுக்காடு கூடியிருந்தது.
இந்த அதிக உயர்வுக்கு, கப்பல்கள், படகுகளின் கட்டுமான வடிவங்கள், உணவுத் தயாரிப்புகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பெருகியது முக்கிய காரணமாக அமைந்தது.
அத்துடன், சிங்கப்பூருக்கான 10 பெரிய சந்தைகளுக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி அதிகரித்தது. ஆனால் சீனா, தைவான், ஹாங்காங் ஆகிய சந்தைகளுக்கான ஏற்றுமதி குறைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 55.3 விழுக்காடு கூடியது. ஜூலையில் அந்த வளர்ச்சி விகிதம் 22.9 விழுக்காடு.

