அரசாங்கம் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கடப்பாட்டுடன் இருப்பதாலும் மக்களும் ஒருவரை மற்றொருவர் மதிப்பதாலும் சிங்கப்பூரில் பெருமளவு நம்பிக்கை இருப்பதாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஆனால் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று எச்சரித்த அவர், இந்த நிலை எளிதாக தடம் புரளலாம் என்று கூறினார்.
உதாரணத்துக்கு சொத்து, வருமான இடைவெளி அதிகரித்து, ஒருசிலருக்கு மட்டும் இந்த அமைப்பு பலன்தருவதாக மக்கள் கருதினால் நம்பிக்கை குறையலாம்.
அல்லது மாணவர்கள் தாங்கள் ஒரு வட்டத்துக்குள் மட்டும் இருப்பதாக நினைத்தாலும் மூத்த ஊழியர்கள் வேலை பெற சிரமப்பட்டாலும் நம்பிக்கை குறையலாம் என்று திரு வோங் கூறினார்.
இக்காரணத்தால்தான் சமூக உடன்படிக்கையின் எல்லா அம்சங்களையும் சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து ஆராய, முன்னேறுவோம் சிங்கப்பூர் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமர் வோங், நன் மதிப்பு (ஹானர்) அனைத்துலக கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் அந்த நிகழ்ச்சி, கொவிட்-19 பெருந்தொற்றால் நான்காண்டுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
ஹானர் சிங்கப்பூர் எனும் அமைப்பு இக்கருத்தரங்கை நடத்தி வருகிறது. நாட்டுநலனுக்காக நாணயம் மிக்க கலாசாரத்தை ஊக்குவிக்க அமைப்பு 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நிதி அமைச்சில் இளம் அதிகாரியாக இருந்தபோது, தமது மனம் அமைதியற்று இருந்ததால் நல்ல வாய்ப்பு, அதிகச் சம்பளம் உள்ள வேறு வேலையை ஏற்றுக் கொண்டதாக திரு வோங் கூறினார்.
ஹானர் சிங்கப்பூர் அமைப்பின் தற்போதைய தலைவரான நிதி அமைச்சின் அப்போதைய நிரந்தரச் செயலாளர் திரு லிம் சியோங் குவான், தம்மைப் பொறுமை காக்கும்படி அறிவுறுத்தியதை திரு வோங் நினைவுகூர்ந்தார்.
தனியார் துறையில் செய்ய முடியாததை அரசாங்கச் சேவையில் சாதிக்கலாம் என்று திரு லிம் அப்போது கூறியிருந்தார்.
அதைக் கேட்டதால்தான் அரசாங்கச் சேவையில் 15 ஆண்டுகளும் அரசியலில் 10 ஆண்டுகளும் சேவையாற்ற முடிந்தது என்று திரு வோங் பகிர்ந்துகொண்டார்.

