அலட்சியம்: தொழில்நுட்பருக்கு அபராதம்

அலட்சியம்: தொழில்நுட்பருக்கு அபராதம்

2 mins read
ec68c409-1832-4384-939c-774ce7a1919d
குற்றத்தை ஒப்புக் கொண்ட மலையப்பன் மாயழகுக்கு $2,700 அபராதம் விதிக்கப் பட்டது. படங்கள்: கெல்வின் சங், ஜேம்ஸ் சங்கிலி -

புக்கிட் பாத்தோக் புளோக் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டபோது அந்த வீட்டுக்கு அருகே இருக்கும் அவசரகால தண்ணீர்க் குழாய் உடனடியாக தண்ணீர் வரக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த தொழில்நுட்பர் ஒருவர் தவறிவிட்டார்.

இப்படி அவர் அலட்சியமாக இருந்ததால் 2019 நவம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் தீ விபத்தின்போது மீட்புப் பணிகள் தாமத மடைந்தன.

தண்ணீர்க்குழாயில் உடனடியாக தண்ணீர் வராமல் இருந்ததே அதற்கான காரணம். தீயணைப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டியதாயிற்று.

அந்தத் தீ விபத்தில் சிக்கி ஒருவர் மாண்டுவிட்டார். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

புலன்விசாரணை நடந்தபோது மலையப்பன் மாயழகு, 51, என்ற அந்தத் தொழில்நுட்பர், பிறர் அறியா வகையில் தண்ணீர் இயந்திர சாதன அறைக்குள் சென்று தனது தவறை மறைக்கும் வகையில், தண்ணீர்க் குழாய் தானாக செயல்படும் நிலைக்கு அதை மாற்றிவிட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த மலையப்பன், நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு $2,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தீப் பாதுகாப்புச் சாதன முறைகளை நன்கு செயல்படுத்துவதற்காக ஜெ. கியர்ட் அலயன்சஸ் என்ற நிறுவனத்தை ஜூரோங் கிளமெண்டி நகர மன்றம் பணியில் அமர்த்தி இருந்தது.

அந்த நிறுவனத்தில் தொழில்நுட்பராக மலையப்பன் வேலை பார்த்தார். புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 210Aன் உச்சிக்குச் சென்று அங்குள்ள தண்ணீர்க் குழாய்களை மாதாமாதம் சரிபார்ப்பது மலையப்பனின் வேலையாகும்.

அந்தக் குழாய் சாதனங்கள் எப்போதுமே தானாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருக்கும்போது தீ ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து தண்ணீர் பெறலாம்.

ஆனால், அந்தத் தொழில்நுட்பர் இயந்திரத்தை ஊழியர் இயக்கும் நிலையில் வைத்துவிட்டார்.

சாதனத்தில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால்தான் தண்ணீர்க் குழாயில் தண்ணீர் வரும் என்ற நிலையில் அவர் வைத்துவிட்டார். இப்படி இருக்கையில், நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 13வது மாடி வீட்டில் தீ மூண்டது.

அருகே இருந்த தண்ணீர்க் குழாயைப் பயன்படுத்த சிலர் முயன்றனர். ஆனால், அந்தக் குழாய்க்குப் பூட்டு போடப்பட்டு இருந்தது. தீயணைப்பாளர்கள் வந்து பூட்டை உடைத்து தண்ணீரை குழாயில் இருந்து பெற முயன்றபோது தண்ணீர் வரவில்லை என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அருகே இருந்த ஒரு குழாயிலும் நிலைமை அப்படியே இருந்தது.

மலையப்பனின் முதலாளியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனம் மலையப்பனையும் இதர இரண்டு பேரையும் சம்பந்தப்பட்ட புளோக்குக்கு சென்று பார்க்கும்படி கூறியது.

வழியில் தன்னுடைய சகாக்களுக்குத் தெரியாமல் நழுவிச் சென்ற மலையப்பன், தண்ணீர்க் குழாய் சாதன அறைக்குச் சென்று சாதனத்தை தானே செயல்படும் நிலைக்கு மாற்றினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.