செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
69098eb8-98c0-44e7-aade-45a4abe2acae
-

ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு

ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் 13 வயது பையனும் ஒருவர். புக்கிட் மேரா பகுதியில் லெங்கோக் பாருவில் செப்டம்பர் 2ஆம் தேதி கத்திகளுடன் இருந்த சிலர் 15 வயது பையன் ஒருவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதனை அடுத்து அவர்கள் கைதானதாக காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது. கைதான ஒன்பது பேரில் எட்டு பேர் பதின்ம வயதினர். அனைவரும் ஆண்கள். ஆக மூத்தவருக்கு வயது 24 என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நம்பப்படும் கத்திகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். ஒன்பது பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை கூறியது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் பிரம்படித் தண்டனையும் விதிக்க முடியும். புலன்விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

குரங்கம்மை கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 19 ஆகியது

சிங்கப்பூரில் மொத்தம் 19 பேருக்கு குரங்கம்மை கிருமி தொற்றி இருப்பதாக சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வாராந்திர அறிக்கையில் தெரிவித்தது.

இந்த மாதம் 4ஆம் தேதிக்கும் 10ஆம் தேதிக்கும் இடையில் புதிதாக மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 19 ஆகியது. அமைச்சு இதற்கு முன்னதாக இந்த மாதம் 8ஆம் தேதி தனது வாராந்திர அறிக்கையை வெளியிட்டது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையிலான வாரத்தில் யாருக்கும் புதிதாக பாதிப்பு இல்லை என்று அமைச்சு தெரிவித்து இருந்தது.

ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட வாரத்தில் ஆகக் கடைசியாக ஒருவருக்கு குரங்கம்மை கிருமி தொற்றியது.

குரங்கம்மை தொற்றியவர்களின் உடல் நிலை சீராக இருக்கிறது; அவர்கள் வீட்டில் இருந்தபடியே குணமடையலாம் என்று மருத்துவர் மதிப்பிட்டு இருந்தால் அத்தகையோர் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே குணம் அடையலாம் என்று முன்னதாக அமைச்சு அறிவித்தது.

நிறுவனரின் கடப்பிதழை ரத்து செய்ய தென்கொரியா பரிசீலனை

டு குவோன் என்ற தென்கொரிய தொழிலதிபர் சிங்கப்பூரில் இருப்பதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அவர் 'டெர்ராஃபாம் லேப்ஸ்' என்ற இணைய நாணய கட்டமைப்பு முறை ஒன்றை நடத்தி வந்தார். மின்னிலக்க சொத்துகள் சரிவதற்கு அந்தக் கட்டமைப்பு முறை காரணமாக இருந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்கொரியரான டு குவோனின் கடப்பிதழை ரத்து செய்யவேண்டும் என்று அந்த நாட்டின் அதிகாரிகள் முயற்சிகளை எடுத்துள்ளனர். ஆகையால், தென்கொரியா வுக்குத் திருப்பி அனுப்பப்படும் ஒரு சூழலை அவர் எதிர்நோக்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டு குவோனின் கடப்பிதழை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டு தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.

அந்த வேண்டுகோளுக்கு அமைச்சு செவிசாய்த்தால், அதற்கான அறிவிப்பு கிடைத்த பிறகு 14 நாட்களுக்குள் டு குவோன் தென்கொரியாவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும்.

அந்தக் கோரிக்கையைத் தான் பரிசீலித்து வருவதாக தென்கொரிய அமைச்சு தெரிவித்தது. கடவுச்சீட்டு இல்லாமல் டு குவோன் சிங்கப்பூரில் தங்கி இருப்பது சாத்தியம் என்று முன்னதாக அது கோடிகாட்டி இருந்தது.

மூலதனச் சந்தைச் சட்டத்தை மீறி இருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல புகார்களின் பேரில் தென்கொரிய நீதிமன்றம் டு குவோனையும் இதர ஐந்து பேரையும் கைது செய்யும்படி உத்தரவிட்டது. அதையடுத்து இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.