வேலை, இணைய வர்த்தகம், இணையக் காதல், அரசாங்க, சீன அதிகாரிகள் போன்ற ஆள்மாறாட்டம் முதலான மோசடிகளில் ஈடுபட்டுள்ள தாகக் கூறப்படுவதையொட்டி காவல்துறை மொத்தம் 322 பேரை விசாரித்து வருகிறது.
அந்தச் சந்தேகப்பேர் வழிகள் 781க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவற்றில் $5.8 மில்லியனுக்கும் அதிக தொகை பறிபோய் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
சந்தேகப்பேர்வழிகளுக்கு வயது 14 முதல் 69 வரை என்று காவல்துறை தெரிவித்தது. ஏமாற்றுதல், சட்டவிரோத பணப்புழக்கம் அல்லது பணப்பட்டுவாடா சேவைகளை உரிமம் இல்லாமல் வழங்கியது ஆகிய குற்றச்செயல்களையொட்டி அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டில் இதுவரை 14,349 மோசடி சம்பவங்கள் பற்றி தெரியவந்திருப்பதாக ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அனைத்து மோசடிகளிலும் பொதுமக்கள் $346.5 மில்லியனை பறிகொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

