மூத்த வழக்கறிஞர் மூன்று மாதம் இடைநீக்கம்

மூத்த வழக்கறிஞர் மூன்று மாதம் இடைநீக்கம்

2 mins read
1e6474bb-6dc6-4bac-8791-005b3d637167
-
Google News Preferred Icon

மீ ஸ்டால் கடை ஒன்றை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பான சச்சரவில் ஒரு தரப்பு சார்பில் செயல்பட்ட மூத்த வழக்கறிஞர் ஒருவர் மற்றொரு தரப்புக்கு கொடுத்த வாக்குறுதியை மீறியதற்காக மூன்று மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

திருவாட்டி நாயுடு பிரியலதா என்ற அந்த மூத்த வழக்கறிஞரிடம் அந்த மற்றொரு தரப்பின் சார்பில் கிட்டத்தட்ட $27,000 மதிப்புள்ள காசாளர் காசோலை ஒன்று ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில் சமரச உடன்பாடு ஏற்படும் வரை அந்தக் காசோலையைத் தன் கட்சிக்காரரிடம் கொடுக்கமாட்டேன் என்று அந்த வழக்கறிஞர் உறுதி தெரி வித்து இருந்தார்.

ஆனால், சச்சரவுக்கு முடிவு ஏற்படாமல் இருந்த காலத்திலேயே தன் கட்சிக்காரரிடம் அந்தக் காசோலையை அவர் கொடுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

திரு இங் கார் கூய், அவரின் மனைவி திருவாட்டி சாங் லியன் சியாங் ஆகியோருக்காக திருவாட்டி நாயுடு அந்தக் கடை விவகாரத்தில் முன்னிலையானார்.

அந்தத் தம்பதிக்கும் அவர்களுடைய தொழில் பங்காளியான திருவாட்டி வோங் சியூ லான் என்பவருக்கும் இடையில் 2017 தொடக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

கொடுத்த வாக்கை மீறிவிட்டதாக திருவாட்டி நாயுடுவுக்கு எதிராக 2019 நவம்பர் 29ஆம் தேதி திருவாட்டி வோங் சிங்கப்பூர் சட்டக் கழகத்திடம் புகார் தெரிவித்தார்.

ஒழுங்கு முறை நடுவர் மன்றத்திடம் திருவாட்டி நாயுடு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு $15,000 அபராதம் விதிக்கலாம் என்று சட்டக் கழகம் வாதிட்டது.

ஆனால், நடுவர் மன்றம் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்ய அல்லது தொழில் நடத்தாமல் தடை விதிக்க அதிகாரம் பெற்றிருக்கும் நீதிமன்றத்திடம் வழக்கை அனுப்பியது.அது மூத்த வழக்கறிஞரை மூன்று மாதம் இடைநீக்கம் செய்தது.