மின்னிலக்க வங்கிகள் பலரையும் உள்ளடக்கி சேவை வழங்கட்டும்

மின்னிலக்க வங்கிகள் பலரையும் உள்ளடக்கி சேவை வழங்கட்டும்

4 mins read
228be6d2-1675-463e-94bf-eeab85af2774
-

உலக அள­வில் மின்­னி­லக்­க­ம­யம் ஏறு­மு­க­மாகி பர­ப­ர­வென பரவி வரு­கிறது. அது­வும் கொரோனா தொற்றுக் காலத்­தில் அதன் முக்­கி­யத்­து­வம் நன்கு உண­ரப்­பட்­ட­தால் மின்­னி­லக்­க­ம­யம் மேலும்­ வே­கம் எடுத்­தது. மின்­னி­லக்­க­ம­யத்­தைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் அதன் அவ­சி­யத்தை உணர்ந்து ஒருபடி முன்­னி­லை­யில் வேக­மாக அந்த யுகத்­திற்­குத் தோதாக மாறி­வ­ரு­கிறது.

மக்­களில் படிக்­கா­த­வர்­கள், சிறு,குறு தொழில் நடத்­து­வோர், கடைக்காரர்கள், முதி­ய­வர்­கள், தொழில்நுட்­பம் பற்றி நன்கு அறி­யா­த­வர்­கள், ஓய்வு­பெற்­ற­வர்­கள் உள்ளிட்ட எல்லாத் தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கி மின்­னி­லக்­க­ம­யம் முழுமை­யா­ன­தாக இருக்­க­வேண்டும் என்­பது சிங்­கப்­பூ­ரின் இலக்­கு.

மின்­னி­லக்கமயம் எல்லாத் துறை­க­ளிலும் வேகமாக விரி­வ­டைந்து வரு­கிறது. என்றா­லும் நிதித்­துறை­யில் அதன் வேகம் பிர­மிக்­கத்­தக்­க­தாக இருக்­கிறது. முக்­கி­ய­மாக வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் மின்­னி­லக்கச் சேவை­களை வேகமாக அதி­கரித்து வரு­கின்­றன. சில வங்­கி­கள் முற்­றி­லும் மின்­னி­லக்க ரீதி­யில் செயல்படும் வங்­கி­க­ளைத் தொடங்கி இருக்­கின்­றன.

எந்த ஒரு சமூ­கத்­தி­லும் வழி­வ­ழி­யான வழக்கமான வங்­கி­களால் போதிய அள­வுக்­குச் சேவை­யைப் பெற இய­லாத மக்­கள், தொழில் நிறு­வ­னங்­கள் இருக்­கத்தான் செய்யும். இதை மறுப்­ப­தற்­கில்லை.

புதி­தாக வேலை­யில் சேர்­வோர், பகுதிநேர ஊழியர்­கள் போன்­ற­வர்­க­ளை­யும் மிகச் சிறிய அளவில் செயல்­படும் நிறு­வ­னங்­க­ளை­யும் இவர்களுக்கு எடுத்­துக்காட்­டா­கக் கூற­லாம்.

சிங்­கப்­பூ­ரில் தொழில்­ ந­டத்த மின்­னி­லக்க வங்கி களுக்கு உரி­மம் கொடுக்­கப்­ப­டும்­போது, அத்­த­கைய வங்­கி­கள் இத்­த­கைய மக்­க­ளையும் நிறு­வ­னங்­களை­யும் உள்­ள­டக்கி மின்­னி­லக்­க­ம­யத்தை மேலும் விரி­வு­ப­டுத்­தும் என்­று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றுதான்.

இருந்தாலும்கூட இத்தகைய மின்­னி­லக்க வங்கி­களும் மக்­கள் தொகை­யில் சிலருக்குச் சேவை வழங்காமல் அவர்களை விட்­டு­வி­டக்­கூ­டிய இடர் இருப்பதாகத் தெரி­கிறது.

ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யும் ஃபேர்பி­ரைஸ் குழு­ம­மும் சேர்ந்து அண்­மை­யில் டிரஸ்ட் பேங்க் என்ற மின்­னி­லக்க வங்கி­யைத் தொடங்­கின.

ஓய்­வு­பெற்ற வங்­கி­யா­ள­ரும் தொழில்­நி­று­வனருமான ஒரு­வர் டிரஸ்ட் பேங்க் கடன் அட்டையைப் பெற விண்­ணப்­பித்­தார். ஆனால் அதைப் பெற அவ­ருக்­குத் தகுதி இல்லை என்­று மின்னிலக்க ரீதியில் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. காரணம் எது­வும் தெரி­விக்­கப்­ப­டவில்லை. வங்கி அதி­காரி­களு­டன் தொடர்­பு­கொள்ளவும் அவரால் முடியவில்லை.

டிரஸ்ட் பேங்க் முற்­றி­லும் மின்­னி­லக்க வங்கி. ஆகை­யால், அலு­வ­ல­கம் சென்று நேரே அதி­காரியைப் பாரக்­க­லாம் என்­றால் அது­வும் அவ­ருக்கு இய­லாத ஒன்­றா­கி­விட்­டது. அவ­ரின் இந்த அனு­ப­வத்­தைப் பற்றி அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்டு இருந்­தது.

இந்­தச் சம்­ப­வம் அங்­கொன்­றும் இங்­கொன்­றும் யாரோ ஒரு­வ­ருக்கு மட்டும் தொடக்­கத்­தில் ஏற்­படக்­கூ­டிய ஒன்­றாக இருக்­க­லாம்.

என்­றா­லும்­கூட ஓய்­வு­பெற்­ற­வர்­கள் சில மின்­னிலக்க வங்­கி­க­ளின் குறிப்­பிட்ட சில சேவைகளைப் பெற முடி­யாத சங்­க­டம் உண்­மை­யி­லேயே இருக்கக் கூடும் என்­ப­தையே இந்­தச் சம்­ப­வம் வெளிச்­சம் போட்­டுக்­காட்டு­கிறது. மின்­னி­லக்க வங்­கிச் சேவை களைப் பெற தகுதி இருந்­தும் சிலர் அதைப் பெற இய­லாத சூழல் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது என்­பதை மறுப்­பதற்­கில்லை.

சிங்­கப்­பூ­ரில் 2030ஆவது ஆண்டு வாக்­கில் மக்­கள்­தொ­கை­யில் ஏறக்­கு­றைய கால்­வா­சிப்­பேர் ஓய்வு­பெற்­ற­வர்­க­ளாக இருப்­பார்­கள் என்­பதை இங்கு நினைத்­துப் பார்க்­க­வேண்டி இருக்­கிறது.

மின்னிலக்க வங்­கி­கள் யார் யாரை எல்­லாம் எட்ட வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து இருக்­க­லாம். அந்த இலக்கு நிறை­வே­றி­யும் இருக்­க­லாம்.

இருந்­தா­லும்­கூட அப்­போ­தும் சேவை­யைப் பெற இய­லாதவர்­கள் இருக்­கக்­கூ­டிய வாய்ப்பு உண்டு.

நிதித்­து­றை­யில் மேலும் பல­ரை­யும் உள்­ள­டக்கி மின்­னி­லக்க சேவைகளை அவர்­க­ளுக்­கும் நீட்­டிக்க மின்­னி­லக்க வங்­கி­களுக்குப் பல வழி­கள் இருக்­கத்­தான் செய்­யும்.

அத்­த­கைய வங்­கி­க­ளுக்கு ஊழி­யர்­கள் வேலை பார்க்­கும் வழி­வ­ழி­யான வங்­கிக­ளைப்போல் அலு­வலகம் கிடை­யாது. ஆகை­யால் 24 மணி நேர­மும் செயல்­ப­டக்­கூ­டிய நேரடி தொலை­பேசி வச­தியை இவை அமைக்­க­லாம்.

அதன் மூலம் அதி­கா­ரி­க­ளு­டன் வாடிக்கை யாளர்­கள் தொடர்புகொள்­ளும் வசதி இருக்க வேண்­டும். மின்­னி­லக்க வங்கி சேவை­யைப் பெற ஒரு­வர் மனுச் செய்­யும்­போது, அவர் மாதச் சம்­பளக்­கா­ர­ராக இருந்­தால் அவ­ரின் விண்­ணப்­பம் எடுத்த எடுப்­பிலேயே ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது.

ஆனால் ஓய்­வு­பெற்­ற­வர்­க­ளைப் பொறுத்தவரை அவர்­க­ளுக்­குச் சொத்­து­கள் இருக்­க­லாம்; அல்­லது வேறு வரு­வாய் இருக்­க­லாம்; ஆகை­யால் இத்­தகை­யோ­ரின் விண்­ணப்­பத்தை எடுத்த எடுப்­பி­லேயே நிரா­கரித்­து­வி­டா­மல் மேலும் பல விவ­ரங்­க­ளைத்­தாக்­கல் செய்ய அவர்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­க­லாம்.

இதைப்­போ­லவே மொத்­த­ விற்­ப­னை ­து­றை­யில் செயல்­படும் மின்­னி­லக்க வங்­கி­கள், சிறிய நிறு­வனங்­க­ளின் மனுவை நிரா­க­ரித்­து­வி­டும் வாய்ப்­பும் இருக்­கிறது. இவற்­றி­டம் அல்­லது இவற்­றின் உரிமை யாளர்­க­ளி­டம் அட­மா­னம் வைக்­கத்­தக்க சொத்­து­கள் இருக்­க­லாம்.

ஆகை­யால் அத்­த­கைய நிறு­வ­னங்­கள் மேலும் விவ­ரங்­க­ளைத் தாக்­கல் செய்து அதன் மூலம் தங்­கள் மின்­னி­லக்க சேவை­களைப் பெற மின்னிலக்க வங்­கி­கள் உத­விக்­க­ரம் நீட்ட வேண்­டும்.

மக்கள்தொகையில் பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். எந்த ஒரு வங்கியும் அது வழிவழியான வங்கியாக இருந்தாலும் மின்னிலக்க வங்கியாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவது என்பது இயலாத ஒன்றுதான்.

ஆனால் சேவைகளைப் பெற இயலாமல் விடு படக்கூடிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க பல வழிகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் மின்னிலக்க வங்கிகளுக்கு இத்தகைய வழிகள் அதிகம் என்றே தெரிகிறது.