சிங்கப்பூரில் புதிய கப்பல், படகு முனையத்தை அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்திருக்கிறது. நடுத்தர, நீண்டகால அடிப்படையில் அதிகரித்து வரும் தேவையை ஈடுகட்ட நாடு தயாராக இருப்பதை உறுதிசெய்வது இதன் நோக்கம்.
இம்மாதம் 6ஆம் தேதி இதன் தொடர்பில் ஆலோசகர்கள், வல்லுநர்கள் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க கழகம் அழைப்பு வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து மீண்டுவரும் சூழலில், சொகுசுக் கப்பல் பயணத்துறை வலுவான வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்து இருப்பதாக கழகம் கூறியது. தென்கிழக்காசிய வட்டாரத்திற்கு வந்துசெல்லும் பயணக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை கழகத்தின் உள்கட்டமைப்பு திட்டமிடல், நிர்வாகப் பிரிவின் செயலாக்க இயக்குநர் ரனித்தா சுந்தரமூர்த்தி சுட்டினார்.
அடுத்த ஈராண்டில் சிங்கப்பூரின் சொகுசுக் கப்பல் பயணத்துறை, கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்னர் இருந்த நிலையை எட்டிவிடும் என்று பயணத்துறைக் கழகத்தின் இயக்குநர் ஜேக்குலின் இங் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கெனவே மரினா பே குருஸ் சென்டர், ஹார்பர்ஃப்ரண்டில் உள்ள சிங்கப்பூர் குருஸ் செண்டர் என இரண்டு முனையங்கள் இங்கு உள்ளன.
பெரிய கப்பல்கள், சிறியவை இரண்டுமே வந்துசெல்லும் வகையில் புதிய முனையம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய சொகுசுப் பயணக் கப்பல்களில் 5,000 முதல் 6,000 பயணிகள் அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்வர். எனவே முனையத்தில் கூடுதலான குடிநுழைவு, சோதனை முகப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
புதிய முனையம் தற்போதுள்ள இரண்டு முனையங்களைப் போன்றே மத்திய வட்டாரத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது சிலரின் எதிர்பார்ப்பு.
அதைச் சுற்றிலும் சில்லறை விற்பனைக் கடைகளும் உணவு, பானக் கடைகளும் அமைந்தால் பயணிகள் மட்டுமன்றி சிங்கப்பூரர்களும் பலனடைவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிலர் கூறி உள்ளனர். சிங்கப்பூரர்கள் பொருள்கள் வாங்கவும் உணவு உண்பதற்கும் விமான நிலையத்திற்குச் செல்வதைப் போலவே சொகுசுக் கப்பல் முனையத்திற்கும் செல்லக்கூடும் என்பது அவர்கள் கருத்து.

