செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f5d72853-f7e2-4d53-929c-6e91dad906af
-

ஆர்க் சிறுவர் நிலைய நிதித்திரட்டு மதிய உணவுப் பெருவிருந்து

புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையம் 'ஆர்க் சில்ரன் செண்டர்'.

இந்த நிலையம் நேற்று நிதி திரட்டும் நோக்கில் மதிய உணவுப் பெருவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த வருடாந்தர நிகழ்ச்சி, கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு கடந்த ஈராண்டுகளாக நடைபெறவில்லை.

நேற்றுப் பிற்பகல் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், 'ஆர்க்' அமைப்பின் புரவலரான திருமதி கோ சோக் டோங், அறநிதி மன்றம், ஒருங்கிணைந்த பாராமரிப்பு அமைப்பின் தலைவரான டாக்டர் ஜெரார்ட் ஈ உள்ளிட்ட 500 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். பெருவிருந்தின் மூலம் 273,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டது.

'பிள்ளை வளர்ப்பில் கோபத்தை வெல்வது அன்றாட நடவடிக்கை'

நூலாசிரியரும் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாருமான ஜில் லிம், கோபத்தை வெல்வது அல்லது அதைக் கட்டுப்படுத்துவது என்பது அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்று கூறுகிறார்.

பிள்ளைகளின் வயதுக்கேற்ப அவர்களின் சினமூட்டும் செயல்களும் மாறுபடக்கூடும். ஆழ்ந்து மூச்சுவிடுதல், விலகியிருத்தல், மற்றவர்களைக் கையாளச் சொல்லுதல் எனும் மூன்று உத்திகளின் வாயிலாக இத்தகைய கோபத்தை வெல்ல முடியும் என்கிறார் இவர்.

கோபத்தில் பெற்றோர் உதிர்க்கும் வார்த்தைகளையோ செய்யும் செயல்களையோ நினைத்துப் பின்னர் வருந்தாமல் இருக்க இது கைகொடுக்கும் என்று சொல்லும் இவரது பிள்ளைகளில் ஒருவர் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர். பொதுவாகவே குழந்தைகளின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளைப் பொறுமையாகத்தான் கடந்து செல்லவேண்டும் என்று கூறும் லிம் அதனால் பெற்றோருக்குத்தான் நன்மை என்கிறார்.