புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்துடன் நேற்றுக் காலை நடைபெற்ற ஓட்டத்தின் மூலம் ஏறத்தாழ ஒரு மில்லியன் வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளது.
14வது சிங்டெல்-சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கத்தின் புற்றுநோய்க்கு எதிரான ஓட்டம், ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடி நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்றது. கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளிலும் அது மெய்நிகர் முறையில் இடம்பெற்றது.
ஐந்து கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர், 15 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற ஓட்ட நிகழ்ச்சியை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருந்து கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு 1.25 மில்லியன் வெள்ளியைத் திரட்டும் இலக்குடன் இடம்பெறும் இந்நிகழ்ச்சி, அடுத்த ஒரு வாரத்துக்கு மெய்நிகர் முறையில் இடம்பெறுவதாகக் கூறப்பட்டது.
'ஸ்ட்ராவா' செயலியைப் பயன்படுத்தி இம்மாதம் 25ஆம் தேதி வரை இதில் பங்கேற்கலாம்.
நேற்றைய நேரடி ஓட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
லெட்ஸ் ரைட்! சிங்கப்பூர்
நிதித் திரட்டு சைக்கிளோட்டம்
இதற்கிடையே, புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் 'லெட்ஸ் ரைட்! சிங்கப்பூர்' சைக்கிளோட்டமும் நேற்றுக் காலை நடைபெற்றது.
துடிப்புமிக்க வாழ்க்கைமுறை, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் இலக்குடன் 650க்கும் மேற்பட்ட சைக்கிளோட்டிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தம் 38,902 கிலோ மீட்டர் தொலைவை சைக்கிளில் கடந்தனர்.
ஏற்பாட்டாளரான 'மிர்க்சஸ்' நிறுவனம் $50,000 நன்கொடையுடன் சைக்கிளோட்டிகள் கடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஈடாக ஒரு வெள்ளி தர உறுதி அளித்திருந்தது. இதன்மூலம், $88,902 நிதி திரட்டப்பட்டது. இந்த நிதி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் புற்றுநோய் அறநிதிக்கு வழங்கப்படும்.
புற்று நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு கட்டண மானியம் வழங்க இது பயன்படுத்தப்படும்.
இந்த அறநிதியின் மூலம் ஆண்டுதோறும் 60 நோயாளிகள் நிதியுதவி பெறுவதாகக் கூறப்பட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய உதவியைத் தொடர்வதற்கும் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள், சுகாதாரப் பராமரிப்புச் சேவையாளர்களின் பயிற்சி ஆகியவற்றுக்கு நிதி வழங்கவும் 20 மில்லியன் வெள்ளியைத் திரட்ட இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

