திருவாட்டி ஜேஸ்மின் டாங்கிற்குப் பத்து வயதாகும் ஜேசன் எனும் மகன் இருக்கிறார். ஜேசன் உடல் உயரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.
உலகில் புதிதாகப் பிறக்கும் 30,000 குழந்தைகளில் ஒன்று இத்தகைய மரபணுக் கோளாற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.
உடல்நலப் பிரச்சினைகளோடு இத்தகைய பிள்ளைகள் மற்றவர்களின் கேலி, கிண்டல், துன்புறுத்தல் ஆகியவற்றுக்கும் ஆளாகின்றனர்.
ஜேசன் பிறந்த பிறகு சிறுவனுக்கு இத்தகைய குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தபோது, இதுகுறித்துத் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று கூறுகிறார் திருவாட்டி டாங்.
இணையத்தில் தேடிச் சேகரித்த சில தகவல்கள் சிங்கப்பூர் சூழலுக்குப் பொருத்தமானவையாக இல்லை. இத்தகைய பெற்றோருக்கான ஆதரவை வழங்குகிறது உள்ளூர் அமைப்பான 'லிட்டில் மைட்டி வாரியர்ஸ்'.
பிறந்தது முதலே உடல் உயரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஜோஷுவா கூ (படம்) என்பவர் சென்ற ஆண்டு ஓய்வாக இருந்த நேரத்தில் இத்தகைய ஆதரவுக் குழுவைத் தொடங்க நினைத்தார்.
புகைப்படக் கலைஞரான இந்த 30 வயது இளையர் முனைப்புடன் தனது யோசனையைச் செயல்படுத்தினார். பிள்ளைகளுக்கு எங்கே உரிய காலணியை வாங்கலாம் என்பது முதல், வீட்டில் இத்தகைய சிறுவர்களுக்கு உகந்த வகையில் மாற்றங்கள் செய்யவேண்டுமா என்பது வரை உடல் உயரக் குறைபாடு கொண்ட பிள்ளைகளின் பெற்றோருக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது 'லிட்டில் மைட்டி வாரியர்ஸ்' குழு.
இதில் தற்போது 12 வயதுக்குக் கீழான 11 பிள்ளைகளும் பதின்மவயதினரும் பெரியவர்களுமாக எட்டுப் பேரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 18 வயது வரை, உயரமாக வளர்வதற்குரிய ஊசியை தினமும் செலுத்தும் சிகிச்சை முறைக்கு ஆண்டுக்கு 420,000 வெள்ளி வரை செலவிட நேரிடும் என்று கருதப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் அந்த மருந்து இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

