சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்ற நோய் காரணமாக உயிரிழந்தனர். தொற்று ஏற்பட்ட 90 நாள்களில் அவர்கள் மாண்டனர். இவர்களிடம் ஏற்கெனவே இருந்து நோயை கொவிட்-19 கிருமி மோசமடைய செய்ததாகக் கூறப்பட்டது. கிருமித் தொற்றால் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்பட்ட மரணங்களில் இந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது அளவுக்கு அதிகமானோர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 2020க்கும் ஜூன் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 2,490 பேர் அதிகப்படியாக உயிரிழந்தனர். கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது மாண்டோரின் மொத்த எண்ணிக்கையிலிருந்து கிருமிப் பரவல் ஏற்படாத சூழ்நிலையில் எதிர்பார்க்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை கழிக்கும்போது இந்த அதிகப்படி எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.
கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பின் மற்ற நோய் காரணமாக 1,087 பேர் உயிரிழந்தனர். தொற்று காரணமாக மாண்டோரின் எண்ணிக்கை 1,403 என்று பதிவு செய்யப்பட்டது.
கிருமித் தொற்றும்போது, இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிலரிடையே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

