நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 'சீ' என்ற நிறுவனத்தின் இணைய வர்த்தகப் பிரிவான ஷாப்பி, ஊழியர்களைக் குறைக்கிறது.
ஆகப் புதிதாக அது வேலையில் இருந்து விலக்கி இருக்கும் ஊழியர்களுக்குச் சந்தை நியதிகளையொட்டி ஏற்புடைய இழப்பீடு கொடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் நேற்று புத்தாக்க ஊடக வெளியீட்டு தொழிற்சங்கத்துடன் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு நேற்று ஆட்குறைப்பு தகவல் கிடைத்தது. என்றாலும் இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஓரிலக்க விழுக்காட்டு அளவில்தான் இருக்கும் என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
மனிதவளம், சந்தைத் துறை, வட்டாரச் செயல்பாடுகள், உற்பத்தி, பொறியியல் ஆகிய பிரிவுகளில் வேலை பார்க்கும் ஷாப்பி ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளானவர்களில் அடங்குவர்.
அந்த நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஆட்குறைப்பு பற்றி அறிவித்தது.