மேம்படவுள்ள கண்ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்பு

மேம்படவுள்ள கண்ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்பு

2 mins read
7a3af9ab-5c9e-4a6b-a97d-1edd3b9d7789
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ (இடது).படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ஃபைபர் புராட்­பேண்ட்' எனப்­படும் கண்­ணாடி இழை அகன்ற அலை வரி­சை இணைப்பின் வேகத்தை வினா­டிக்கு ஒரு கிகா­பைட்­டி­லி­ருந்து 10 கிகா­பைட்­டுக்கு உயர்த்த சிங்­கப்­பூர் திட்­ட­மிட்­டுள்­ளது. தற்­போது சிங்­கப்­பூர் வீடு­களில் கண்­ணாடி இழை அகன்ற அலை வரி­சை­ இணைப்பின் வேகம் வினா­டிக்கு ஒரு கிகா­பைட்டாக உள்ளது.

நாட்­டின் மின்­னி­லக்­கத் தொடர்­புக் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களில் இது அடங்­கும். 5ஜி கட்­ட­மைப்­புக்­கான சூழலை விரி­வு­ப­டுத்­து­வது, 6ஜி முறை தொடர்­பி­லான ஆய்­வுக்கு செலவு செய்­வது ஆகி­ய­வை­யும் நட­வ­டிக்­கை­களில் அடங்­கும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வருங்­கால தொடர்பு, இணைப்பு ஆய்­வுக் கூடத்­தின் அதி­கா­ர­பூர்வ திறப்பு நிகழ்ச்­சி­யில் நேற்று கலந்­து­கொண்­ட­போது அவர் பேசி­னார்.

"கொள்­ளை­நோய்ப் பர­வ­லின்­போது நமது வலு­வான இணையத் தொடர்­பு­கள் சிங்­கப்­பூ­ரின் மீள்­தி­ற­னுக்­குப் பங்­க­ளித்­தன. மின்­னி­லக்­கச் சூழ­லுக்கு நமது வாழ்க்­கை­யை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் மாற்­றிக்­கொள்ள அது வகை­செய்­தது," என்று திரு­மதி டியோ குறிப்­பிட்­டார். எனி­னும், மிகை மெய்­நி­கர் தொழில்­நுட்­பம், மெய்­நி­கர் தொழில்­நுட்­பம், 'மெட்­டா­வெர்ஸ்' எனும் யதார்த்த மின்­னி­லக்க உல­கம் போன்­ற­வற்­றுக்கு மேம்­பட்ட அகன்ற அலை வரிசை இணைப்­புத் தேவை என்­பதை அவர் சுட்­டி­னார்.

தங்­க­ளின் மின்­னி­லக்­கத் தொடர்­பு­களை மேம்­ப­டுத்த இதர நாடு­களும் முயற்சி எடுத்­து­வ­ரு­வ­தா­க­த் திரு­மதி டியோ சொன்­னார். உதா­ர­ண­மாக, தனது நாட்­டில் பாதி பேர் இவ்­வாண்­டி­று­திக்­குள் வினா­டிக்கு 10 கிகா­பைட் வேகம் கொண்ட கண்­ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்­பைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்­பது தென்­கொ­ரி­யா­வின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

அகன்ற அலை வரிசை மேம்பாடு குறித்த மேல்விவரங்களைத் திருமதி டியோ வெளியிடவில்லை.