ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டை வரவேற்கும் வாணவேடிக்கைக் காட்சிகள் மரினா பேயில் இடம்பெறவுள்ளன. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின் காரணமாக இந்நிகழ்வு இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது புத்தாண்டை வரவேற்கப் பல்வேறு குடியிருப்பு வட்டாரங்களில் வாணவேடிக்கைக் காட்சிகள் இடம்பெற்றன. கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அவ்வாறு செய்யப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்கான 'மரினா பே சிங்கப்பூர் கவுண்ட்டவுன்' எனும் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்கிறது. கொண்டாட்ட நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று தொடங்கும்.
புத்தாண்டை முன்னிட்டு மரினா பே பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இடம்பெறும். இறுதிக் கட்டமாக டிசம்பர் 31ஆம் தேதியன்று மாபெரும் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி அரங்கேறும். 'ஏவெக்ஸ்' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பிரிவு இவ்வாண்டின் வாணவேடிக்கைப் படைப்புகளை வழங்கவுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவேற்பு நிகழ்ச்சியிலும் இந்நிறுவனம்தான் வாணவேடிக்கைகளை வழங்கியது.
ஒரு மாதம் நீடிக்கவுள்ள புத்தாண்டு நிகழ்ச்சிகளில் உணவு விழாவும் அடங்கும். அதன் தொடர்பில் பேஃபிரண்ட் நடவடிக்கை வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும்.
டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதிவரை 'ஷேர் தி மோமெண்ட்' எனும் விளக்கு சாகச நிகழ்ச்சி நடைபெறும். ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், மெர்லயன் ஆகியவற்றின் தோற்றத்தையே மாற்றும் வண்ணம் இந்நிகழ்ச்சியின் படைப்புகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளக்கு சாகச நிகழ்ச்சி உள்ளூர் மாணவர்களின் படைப்புகளைக்கொண்டிருக்கும்.