சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்து பராமரிப்புச் சேவை நிலையம் 2025ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பனிகள் 75 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆக அண்மைய தகவலை நில போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவை நிலையம், அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதில் மூன்று பேருந்து கிடங்குகளும், ஒரு ரயில் கிடங்கும் அமைக்கப்படும். இப்படிப்பட்ட ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உலகிலே இதுவே முதல்முறை.
கிடங்கின் கட்டுமான பணி 2016ல் தொடங்கியது. முன்னதாக கிடங்கு 2024ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிருமிப்பரவலால் தாமதமடைந்த கட்டுமானத் திட்டங்களில் இதுவும் ஒன்று.
மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளைச் சேர்ந்த சுமார் 220 ரயில்களையும் 760 பேருந்துகளையும் இங்கு நிறுத்தி பராமரிக்க முடியும்.

