மகளைக் கொன்றவருக்கு மனநலப் பிரச்சினை; காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவார்
தம்முடைய எட்டு வயது மகள் ஒரு தீய சக்தி என்று குரல்கள் கேட்டதைத் தொடர்ந்து மகளின் கழுத்திலும் உடலிலும் 76 முறை குத்திக்கொன்ற மாது, காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கேலாங் லோரோங் 31ல் உள்ள ஒரு குடியிருப்பில் அச்சிறுமியை 36 வயது மாது கொன்றதாக உயர் நீதிமன்றம் நேற்று கண்டறிந்தது.
அந்த மாதுக்கு இளைய மகள் ஒருவரும் உள்ளார். அம்மூவரும் அந்த வீட்டின் அறை ஒன்றைப் பகிர்ந்துகொண்டனர். அந்த மாதின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அந்த வீட்டில் வசித்தனர்.
அந்த மாதுக்கு மனநலப் பிரச்சினை இருந்ததன் காரணமாக, அவரைக் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அந்த மாதுக்கு 'ஸ்கிட்ஸோஃபிரீனியா' எனும் மனநலப் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது.
கொலை நிகழ்ந்தபோது அவர் சரியான மனநிலையில் இல்லை என்பதும் தெரியவந்தது.
அந்த மாதின் மனநலப் பிரச்சினைக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்படாமல் போனதாக மனநலக் கழகம் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவித்தன.
மனநலப் பிரச்சினை காரணமாக அவரது சிந்தனையும் செயல்களும் குழம்பிப் போனதால், கொலை நிகழ்ந்தபோது எது சரி, எது தவறு என்று அவரால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறின.
அந்த மாதின் காதலர் 2014ல் சீனாவுக்குத் திரும்பிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த மாதுக்கு குரல்கள் கேட்கத் தொடங்கின. காலப்போக்கில் அந்தக் குரல்கள் உரக்கமாகவும் அடிக்கடியும் கேட்கத் தொடங்கின.
தம்மையும் தம் குடும்பத்தாரையும் காயப்படுத்தவும் தம் மூத்த மகளைக் கொல்லவும் அந்த மாதிடம் குரல்கள் கூறின.
இந்நிலையில், தம் கட்சிக்காரர் விரைவில் குணமடைந்து அவருடைய குடும்பத்துடன் ஒன்றிணைவார் என தாம் நம்புவதாக அந்த மாதின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

