சிங்கப்பூரின் ஆகப்பெரிய வாகன வளாகத்தில் இம்மாதம் 2ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சுங்கை காடுட் பகுதியில் எண் 60 ஜாலான் லாம் ஹுவாட்டில் உள்ள உரிமம்பெற்ற சேமிப்புக்கிடங்கில் தான் சோதனை நடத்தியதாக சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது. இந்த முகவரியில் 'காரோஸ் சென்டர்' வளாகம் உள்ளது. பலமாடிக் கட்டடமான இது, 2.3 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. கார் இறக்குமதியாளர்களும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பணையாளர்களும் அங்கு செயல்படுகின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய சுங்கத்துறை பேச்சாளர், "குற்றவியல் அல்லது வணிக ரீதியிலாக விசாரணை நடத்தும் ஆணையம், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்வரை வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிடாது," என்றார்.
'காரோஸ் சென்டர்' வளாகத்தினுள் உள்ள ஒரு பகுதியைச் சுற்றி சுங்கத்துறை தடுப்புவேலிகளைப் போட்டிருந்தது. அதைக் காட்டும் புகைப்படங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி சமூக ஊடகங்களில் வலம்வந்தன.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுங்கத்துறை, உரிமம்பெற்ற சேமிப்புக்கிடங்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அந்த இடத்தைப் புகைப்படங்கள் காட்டுவதை உறுதிப்படுத்தியது.
'கார்ஸ் அண்ட் காஃபி' எனும் நிறுவனத்துக்கு வெளியிலும் தடுப்புவேலிகள் போடப்பட்டிருந்ததைப் புகைப்படங்கள் காட்டின. இந்த நிறுவனம், உயர் ரக கார்களை இறக்குமதி செய்கிறது. 'காரோஸ் சென்டர்' வளாகத்தின் ஆறாவது தளத்தில் இதன் விற்பனைக் கூடம் அமைந்துள்ளது.
இம்மாதம் 13ஆம் தேதி இந்த நிறுவனத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது. சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வலம்வந்தது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறிய இந்நிறுவனம், தான் எப்போதும்போல வியாபாரம் நடத்தி வருவதாகச் சொன்னது.

